ஜெ.மகன் என்று கூறிய நபருக்கு நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Monday,March 27 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நடிகர் சோபன்பாபுவுக்கும் பிறந்த மகன் என போலி ஆவணங்கள் தாக்கல் செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 17ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தான் ஜெயலலிதாவுக்கும், ஷோபன் பாபுவுக்கும் 1985-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி பெங்களூருவில் பிறந்ததாகவும் பின்னர் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததால் தன்னை ஈரோடு தம்பதிக்கு தத்து கொடுத்ததாகவும் இந்த தத்தெடுப்பு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையில் நடந்ததாகவும் ஒருசில ஆவணங்களுடன் வழக்கு தொடுத்தார்
கிருஷ்ணமூர்த்தியின் ஆவணங்களை பார்த்தவுடனே போலி என்று கண்டுபிடித்த நீதிபதி கிருஷ்ணமூர்த்தியை ஏன் கைது செய்யக்கூடாது என்று கூறியதோடு இவருடன் ஆதரவாக வந்திருந்த டிராபிக் ராமசாமிக்கு கண்டனமும் தெரிவித்தார். பின்னர் அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் உண்மையானதுதானா என்று சரிபார்க்க போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பினர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என்பதை உறுதி செய்தனர். மேலும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் டிராபிக் ராமசாமி ஆகிய இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை
இந்நிலையில் நீதிமன்றத்துடன் மனுதாரர் விளையாட அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதி கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக கைது பிடித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுங்கள்” என்று உத்தரவிட்டதோடு அடுத்த விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.