நியாயப்படி த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்: மன்சூர் அலிகானுக்கு நீதிபதி கண்டனம்..!

  • IndiaGlitz, [Monday,December 11 2023]

நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடுத்த மன்சூர் அலிகான் இடம் நீதிபதி ’நியாயப்படி பாதிக்கப்பட்ட த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று அதிரடியாக கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். மேலும் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட நிலையில் ’மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டவுடன் இந்த பிரச்சனை முடிவடைந்ததாக த்ரிஷாவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் திடீரென மன்சூர் அலிகான் ’தனது வீடியோவை முழுமையாக பார்க்காமல் தன் மீது குற்றம் சாட்டியதாக த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ’பாதிக்கப்பட்ட த்ரிஷாவே அமைதியாக இருக்கும்போது நீங்கள் எதற்காக வழக்கு தொடுத்தீர்கள்’ என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நடிகராக இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில் பொது வெளியில் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா? இது குறித்து மன்சூர் அலிகானிடம் எடுத்து கூறுங்கள் என அவருடைய வழக்கறிஞரிடம் நீதிபதி தெரிவித்தார்.

‘தான் எந்த தவறும் செய்யவில்லை என தற்போது கூறும் மன்சூர் அலிகான் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கூறினாரா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் ‘தான் பேசியது தொடர்பாக முழு வீடியோவையும் தாக்கல் செய்வதாகவும் தன்னை பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை த்ரிஷா நீக்க வேண்டும் என்றும் மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞர் வாதாடிய போது த்ரிஷா தரப்பினர் ’பாதிக்கப்பட்ட தாமே அமைதியாக உள்ள நிலையில் அவர் எதற்காக வழக்கு தொடர்ந்து உள்ளார் என தெரியவில்லை என தெரிவித்தனர்.

இதனை அடுத்து த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மன்சூர் அலிகான் மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்த நீதிபதி இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.