வைரமுத்துவை சின்மயி திருமணத்திற்கு அழைத்தது ஏன்? பெண் பத்திரிகையாளர் விளக்கம்
- IndiaGlitz, [Friday,October 12 2018]
பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சின்மயியை நோக்கி ஒருசிலர் கேட்கும் கேள்விகள் இரண்டே இரண்டுதான். ஒன்று இத்தனை வருடங்களாக சின்மயி இந்த விஷயத்தை ஏன் வெளியே கூறவில்லை. இன்னொன்று இவ்வளவு நடந்திருந்தும் வைரமுத்துவை சின்மயி ஏன் தனது திருமணத்திற்கு அழைத்து அவரிடம் ஆசி பெற்றார். இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஏற்கனவே சின்மயி பதில் கூறிவிட்டாலும் தற்போது பெண் பத்திரிகையாளரான தன்யா ராஜேந்திரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து விரிவாக விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது:
பல வருடங்களுக்கு முன்பு தன்னிடம் தவறாக நடந்து கொண்ட வைரமுத்துவை சின்மயி ஏன் தனது திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று நுண்ணுணர்வு இல்லாமல் கேள்வி கேட்பவர்களுக்கு.
வைரமுத்துவை சின்மயி திருமணத்திற்கு அழைத்து வாழ்த்து பெற்றது ஏன் இவ்வளவு பெரிய பிரச்னையாக பேசப்படுகிறது? யாரிடமுமே சொல்லாமல் பெண்கள் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களுடன் சேர்ந்து வாழ்கிறார்கள், வேலை செய்கிறார்கள், ஒன்றாக இருக்கிறார்கள். ஒன்று அவர்கள் அதை மறந்து விடுகிறார்கள், அல்லது அவர்களது துயரத்தை தமக்குள்ளேயே வைத்து பூட்டிக்கொள்கிறார்கள். மனதின் ஓரத்தில் வைத்து அதைப் பற்றி யோசிக்காமல் இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரச்னையையும் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத தனித்தனி விசயங்களாக பார்ப்பதில் நாம் எல்லோருமே நிபுணர்கள்தான். ஆம், அவர்கள் அதை உண்மையாக செய்கிறார்கள். நிறைய ஆண்களுக்கு இது புரியாது என்று நிச்சயமாக தெரியும். ஆனால் உங்களுக்கு அருகில் உள்ள பெண்ணிடம் கேட்டுப் பாருங்கள். அவரை துன்புறுத்தியவர் மேலதிகாரியாக இருக்கலாம், அல்லது அதிகாரம் மிக்கவராக, உறவினராக இருக்கலாம். அப்பாவாக சகோதரனாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த பெண்கள் எதுவும் நடக்காதது போல அவர்களது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பார்கள். சண்டை போடவும் நீதி கேட்கவும் நிறைய பெண்கள் விரும்புவதில்லை. அவர்கள் எதுவும் நடக்காதது போல வாழ்க்கையை நடத்தவே விரும்புகிறார்கள். காரணம், அவர்களுக்கு வேறு வழி இருப்பதில்லை.
அதனால் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களை திருமணத்துக்கு அழைக்கிறார்கள், அவர்களோடு விடுமுறை கழிக்கிறார்கள், அவர்கள் கணவர்களாக இருந்தால் வாழ்க்கை முழுவதையும் சேர்ந்து வாழ்கிறார்கள்.
சின்மயிக்கு வேறு ஏதும் வழி இருந்ததா? அவர் பயந்தார், அவருக்கு இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியும். அவருக்கு அவரது பணி முக்கியமாக இருந்தது. இதில் எதாவது தவறு அல்லது சட்டத்துக்கு புறம்பான விசயம் இருக்கிறதா?
சின்மயியிடம் இந்த கேள்வியை எழுப்புபவர்கள் பெரும்பாலும் ஆண்களாகதான் இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. காரணம் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவருடன் அவர்கள் சேர்ந்து வாழ வேண்டியிருப்பதில்லை, எதுவும் நடக்காதது போல நடிக்க வேண்டியதில்லை.
நீங்கள் அவரை நம்புகிறீர்களா இல்லையா என்பது கேள்வியில்லை, நீங்கள் என்ன நிலைப்பாடு எடுக்கவும் உங்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ஒருவரை நம்பாமல் இருக்க இது போன்ற அபத்தமான காரணங்களை கண்டுபிடிக்காதீர்கள்.
(பிஷப் ஃப்ராங்கோவும் இதே காரணத்தைதான் சொன்னார். அடுத்த நாள் கன்னியாஸ்திரி அவரோடு உட்கார்ந்திருக்கும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். நான் அவரை பாலியல் வல்லுறவு செய்தேன் என்றால் ஏன் அடுத்த நாள் என்னோடு உட்கார்ந்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்)
இவ்வாறு பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் கூறியுள்ளார்.