ஐபிஎல்-இல் நன்மை இருக்கு? இன்னொரு இங்கிலாந்து வீரரின் தடாலடி பதில்!
- IndiaGlitz, [Wednesday,March 10 2021] Sports News
இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடர் போட்டியை நிறைவு செய்து இருக்கிறது. அடுத்து டி20, ஒருநாள் போட்டிகளை முடித்த கையோடு வரும் ஜுன் 2 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான 2 தொடர் போட்டிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டு உள்ளது.
ஆனால் இதற்கு இடையில் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. ஏப்ரல் 9-மே 30 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதாக பிசிசிஐ தெரிவித்து உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்தைச் சேர்ந்த பல முன்னணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதாக இருந்தால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.
இப்படி கலந்து கொள்ளாத வீரர்களின் பட்டியலை கடந்த சில தினங்களாக ஊடகங்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரன், ஜாஸ் பட்லர், ஆர்ச்சர், பேர்ஸ்டோ போன்ற வீரர்களும் அடக்கம். இவர்களின் ஐபிஎல் முடிவை குறித்து இப்போதே விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாத இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதில் உறுதியாக இருக்கின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஜாஸ் பட்லர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் பணத்தைத் தவிர வேறு ஒரு பெரிய நன்மையும் இருக்கிறது. அதாவது வரப்போகிற உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி இந்தியாவில் நடத்தப்படுவதாக இருந்தால் அகமதாபாத் மைதானம் போன்ற முக்கிய மைதானங்களில்தான் போட்டிகள் நடைபெறும்.
எனவே ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் இப்போதே உலகக் கோப்பை போட்டிகளுக்கு தயார்படுத்திக் கொள்ள முடியும் எனக் கூறி இருக்கிறார். ஜாஸ் பட்லரின் இந்த கருத்தில் ஓரளவு உண்மை இருந்தாலும் இதை ரசிகர்கள் ஒப்புக் கொள்வார்களா? என்பதுதான் இங்கு கேள்வியாக இருக்கிறது.