ஜாலியா ஒரு டூர்… சுற்றுச்சூழல் காக்கும் அலையாத்தி காடுகள்…
Send us your feedback to audioarticles@vaarta.com
கடல் எனும் பேரக்கன் அதன் எல்லையில் இருக்கும் வரையில்தான் எல்லோருக்கும் நல்லது. ஒருவேளை கரையைத் தாண்டி வந்தால் நிலைமை அவ்வளவுதான். அப்படி கடல் அலை கரையில் இருக்கும் வீடுகளைச் சேதப்படுத்தாமல் இருப்பதற்காகவும் நிலத்தடி நீரை மாசுபடாமல் வைக்கவும் தற்காப்புக்காக வளர்க்கப்படும் காடுகளுக்கு பெயர்தான் இந்த அலையாத்தி காடுகள். இதற்கு மாங்குரோவ் காடுகள் என்று மற்றொரு பெயரும் இருக்கிறது.
மேலும் கடற்கரையை ஒட்டி இருக்கும் பகுதிகளில் மண் அரிப்பை தடுத்தல், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருத்தல், மீன் வளத்தை அதிகரித்தல் என இந்த அலையாத்தி காடுகளின் பங்கு அளப்பரியது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். அதோடு சுனாமி எனும் பேரலை வந்தால் கூட இந்த காடுகள் இருக்கும் பகுதியில் பாதிப்புகள் இருக்கவே இருக்காது என்றும் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாரவம் பகுதியில் 3,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கும் அலையாத்தி காடுகள் உலக அளவில் 2 ஆவது பெரிய காடாக விளங்குகிறது. இந்த வகை காடுகள் தமிழகத்திற்கு மட்டும் அல்ல, இந்தியாவிற்கே பெருமை சேர்த்து இருக்கிறது. காரணம் உலகம் முழுவதும் இந்த வகை காடுகளை வளர்க்க முடியாது. சில பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய பல அரிய மரங்களைக் கொண்ட காடுகளின் தொகுப்பாக இந்த வகை காடுகள் வளர்க்கப் படுகின்றன.
சென்னையில் இருந்து சுமார் 5 மணிநேரப் பயணத்திற்குப் பிறகு பிச்சாரவத்திற்கு சென்றுவிட முடியும். சிதம்பரத்தில் இருந்து 16 கி.மீ தொலையில் இந்தக் காடுகள் அமைந்து இருக்கிறது. அங்கு 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அடர்த்தியான மாங்குரோவ் மரங்கள் வளர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்தப்பகுதி முழுக்க வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் காடுகளில் வித்தியாசமான பல்லுயிரினங்கள், மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள், பறவை இனங்கள் எனத் தனி உலகமாகவே காட்சி அளிக்கிறது.
பிச்சாவரத்தைத் தவிர திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியிலும் ஒரு அலையாத்திக்காடு இருக்கிறது. தஞ்சாவூர்-திருவாரூருக்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 119 ஏக்கர் பரபரப்பளவில் பல அரிய மரங்களின் தொகுப்பாக காட்சி அளிக்கும் இந்த அலையாத்தி காடுகள் சுனாமியில் இருந்து அந்தப் பகுதியை காப்பாற்றி வைத்திருக்கிறது. சுனாமி ஏற்பட்டபோது தமிழகத்தின் பல கடலோர மாவட்டங்களைச் சூறையாடியது. ஆனால் இந்த அலையாத்தி காடுகளினால் திருவாரூர் மாவட்டத்திற்கு பாதிப்பு குறைவாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் முத்துப்போட்டை அலையாத்தி காட்டில் மாங்குரோவ் மரங்கள் மட்டுமல்லாது மேலும் 12 வகை அரிய மரங்கள் வளர்க்கப்பட்டு இருக்கின்றன. அதில் சுரப்புன்னை, கருங்கண்டல், ஆட்டுமுள்ளி, பண்டிகுச்சி, நரிக்கண்டல், சிறுகண்டல், காகண்டல் போன்றவையும் வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வகை மரங்கள் மண் அரிப்பை தடுத்து நிறுத்தி முகத்துவாரப் பகுதிகளை செழுமையாக மாற்றுகிறது. தமிழகத்தைத் தவிர இந்த வகை காடுகள் காங்கை- பிரமபுத்திரா முகத்துவாரத்திலும் வளர்க்கப்பட்டு இருக்கிறது.
எனினும் பெரும்பாலான அலையாத்திக் காடுகள் தமிழகத்தில்தான் இருக்கின்றன. இந்தக் காடுகள் உப்புத்தன்மையை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. ஆனால் இந்த வகை காடுகளை வளர்ப்பதிலும் ஒரு பெரிய சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. வெறுமனே கடல் நீரை மட்டும் வைத்துக்கொண்டு இந்த வகை காடுகளை வளர்க்க முடியாது. அதற்காக கடலும் ஆற்றுநீரும் சேரும் இடங்களில்தான் இந்தவகை காடுகளை அரசாங்கம் வளர்க்க முயற்சிக்கிறது.
அலையாத்தி காடுகளில் மேலும் 8 வகைகள் இருக்கிறதாம். அந்த வகையில் இந்தியா முழுக்க 4 லட்சத்து 87 ஆயிரத்து 100 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் வளர்க்கப்பட்டு இருக்கிறது எனக் கூறுகிறது ஒரு புள்ளி அறிக்கை. தற்போது தமிழக வனத்துறை ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதிதாக 100 ஏக்கர் பரப்பரளவில் அலையாத்தி காடுகளை வளர்க்க திட்டமிட்டு இருக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள வனப்பரப்பை விரிவுப்படுத்த முடியும் என்றும் உயிர் பல்வகையை அதிகப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் கடலோரப் பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டிச்சென்ற மக்கள் தற்போது சூனாமியை நேரடியாக அனுபவித்து இருக்கின்றனர். எனவே மரங்களின் தேவையை உணர்ந்து மக்களும் வனத்துறையும் தற்போது காடுகளை வளர்ப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார். பூமி மனிதர்களுக்கானது அல்ல. 20 லட்சம் உயிரினங்கள் வாழ்வதற்காக படைக்கப்பட்ட பூமியில் மனிதனும் ஒரு உயிரினம், அவ்வளவுதான். அந்த வகையில் இயற்கை எனும் சூழல் மாற்றம் அடைந்தால் மனித வாழ்க்கைக்கும் சிக்கல்தான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments