நல்ல சினிமாவை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க ஒரு புது முயற்சி

  • IndiaGlitz, [Friday,August 19 2016]

சினிமா என்பது ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், அந்த சினிமாவின் மூலம் சமுதாயத்தில் பல அதிர்வுகள் ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். தற்போதைய சூழ்நிலையில் ஒரு சினிமாவை திருட்டு டிவிடி கயவர்களிடம் இருந்து காப்பாற்றுவதும், ஒரு நல்ல சினிமாவை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும் பெரிய சவாலாக இருக்கின்றது.
பெரும்பாலான மக்கள் திருட்டு டிவிடியை நோக்கி செல்ல கூறும் ஒரே காரணம் திரையரங்குகளில் அதிகமாக உள்ள டிக்கெட்டின் கட்டணம்தான். டிக்கெட்டின் கட்டணத்தை குறைத்தால் தியேட்டரில் கூட்டம் அதிகரிக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான 'ஜோக்கர்' என்ற சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் அடங்கிய திரைப்படத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் திருப்பத்தூரில் உள்ள ஒரு திரையரங்கம் வரும் ஞாயிறு அன்று மட்டும் ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்றும் ஒரு நல்ல சினிமா பெரும்பாலான ரசிகர்களை போய் சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.