ஜான்சன் & ஜான்சனுக்கு வந்த பெரும் சோதனை… தொடரும் பரபரப்பு!!!
- IndiaGlitz, [Monday,November 23 2020]
குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் அழகுசாதனப் பொருட்களுக்கு இந்தியா போன்ற பல வளரும் நாடுகளில் பலத்த வரவேற்பு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இந்தப் பொருட்களில் அதிகளவு ராசாயனம் கலக்கப்படுகிறது என்றும் அதனால் பலருக்கு புற்றுநோய் போன்ற கொடிய நோய்த் தாக்கம் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இந்நிறுவனத்தின் அமெரிக்க தயாரிப்புகள் சிலகாலம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அறிவிப்புகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ப்ரூக்ளினைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் அழகுச் சாதனப் பொருட்களை நான் பல வருடங்களாகப் பயன்படுத்தி வந்தேன். அதில் கலக்கப்பட்ட ரசாயனப் பொருட்களினால் எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்நிறுவனம் 325 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை மேன் ஹெட்டன் நீதிமன்றம் பல நாட்களாக விசாரித்து வந்த நிலையில் தற்போது 120 மில்லியன் டாலர் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஆனால் இந்த வழக்கு தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜான்சன் & ஜான்சனுக்கு எங்களின் தயாரிப்புகள் மிகவும் பாதுகாப்பானவை. வாடிக்கையாளர்களுக்கு வரும் சிரமங்களுக்கு நாங்கள் வருந்துகிறோம், ஆனால் இது எங்களின் தயாரிப்புகளினால் ஏற்பட்டது அல்ல எனப் பரப்புரை செய்து வருகிறது. இதேபோன்ற ஒரு வழக்கில் கடந்த மே 2019 இல் ஒருவருக்கு இந்நிறுவனம் இழப்பீடு வழங்கியது. இந்த ஆண்டு பிப்ரவரியில் கருப்பப்பை புற்றுநோயால் உயிரிழந்த பெண்மணி ஒருவருக்கு 475 கோடி இழப்பீடு வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.