மாஸ்க் அணிந்து உடற்பயிற்சி செய்த வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்!
- IndiaGlitz, [Saturday,May 16 2020]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மாஸ்க் அணிவது என்பது கிட்டத்தட்ட உலகம் முழுவதிலும் கட்டாயமாக உள்ளது. கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவாமல் இருக்க மாஸ்க் அணிவது அவசியம் என அனைத்து நாடுகளின் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸின் பிறப்பிடம் என்று கூறப்படும் சீனாவின் வூகான் மாகாணத்தில் மாஸ்க் அணிந்து உடற்பயிற்சியில் ஈடுபட்ட வாலிபர் ஒருவருக்கு ஏற்பட்ட விபரீதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வூகான் மாகாணத்தை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் மாஸ்க் அணிந்து ஜாக்கிங் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், அவர் 3 கிமீ ஓடிய நிலையில் திடீரென மயக்கமடைந்து விழுந்ததாகவும் தெரிகிறது.
இதனையடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியபோது, ‘மாஸ்க் அணிந்து அந்த இளைஞர் உடற்பயிற்சி செய்ததால் அவருடைய நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜன் செல்லவில்லை என்றும், அதனால் அவருக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் மாஸ்க் அணிந்தால் பிரச்சனை இல்லை, ஆனால் உடற்பயிற்சி செய்யும்போது, கடினமான வேலை பார்க்கும்போதோ மாஸ்க் அணிந்து இருந்தால் நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது என்று மருத்துவர்கள் கூறியுள்ளது மாஸ்க் அணிபவர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்