அமெரிக்காவின் கதையை மாற்றிய இருவர்… டைம் இதழின் புதிய கவுரம்!!!
- IndiaGlitz, [Friday,December 11 2020]
உலகின் பிரபல பத்திரிக்கையான டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மனிதர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மனிதர்களாக இருவரை தேர்வு செய்து உள்ளது. அதில் அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபரான கமலா ஹாரிஸ் இருவரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் இவர்களை கவுரவிக்கும் விதமாக அமெரிக்காவின் கதையை மாற்றியவர்கள் என்ற குறிப்புடன் அவர்களின் அட்டை படத்தையும் டைம் இதழ் வெளியிட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு டைம் இதழுக்கான சிறந்த மனிதர் என்ற வரிசையில் உலகின் மிகச்சிறிய வயது இளம் போராளியான கிரெட்டா துன்பெர்க் இடம் பெற்று இருந்தார். இவர் காலநிலை மாற்றத்தைக் குறித்து உலகப் பொருளாதார மாநாட்டின் எழுப்பிய கேள்விகள் உலகம் முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது எனலாம். அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மனிதர்கள் என்ற வரிசையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் இடம் பெற்று உள்ளனர்.
தேர்தலில் அதிபர் பதவியை பெறுவதற்குத் தேவையான 270 வாக்குகளைவிட அதிகமாக 290 வாக்குகளை பெற்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த ஜோ பிடன். இத்தேர்தலில் குடியரசு கட்சியைச் சார்ந்த டிரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்று அதிபர் பதவிக்கான போட்டியில் தோல்வியைச் சந்தித்தார். மேலும் இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன் எனத் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்து வரும் டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை மட்டுமே அதிபர் பதவியில் இருக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.