அதிபர் ட்ரம்புக்கு டஃப் கொடுக்கும் ஜோ பிடன்!!! அமெரிக்க அரசியலில் தொடரும் பரபரப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் “நான் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டால் தற்போது நடைமுறையில் இருக்கும் H-1B விசாக்களுக்கான தடை நீக்கப்படும்” என்ற அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் எனது நிர்வாகத்தில் இருக்காது எனவும் உறுதி அளித்து இருக்கிறார். இந்தக் கருத்தை ஜோ பிடன் கூறியதைத் தொடர்ந்து அதிபர் பதவிக்கான பிரச்சாரங்களில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கொரோனா ஒட்டு மொத்த அமெரிக்காவையே புரட்டி எடுத்தாலும் அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான பரபரப்பு அதிகமாகி வருகிறது. இதனால் இரு கட்சி வேட்பாளர்களும் கூறும் உறுதி மொழிகளை நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பல கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் தற்போது வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு “அமெரிக்காவில் இருக்கும் ஒட்டு மொத்த வேலை வாய்ப்பும் சொந்த மக்களுக்கே கிடைக்க வேண்டும்” எனவும் அதற்காகச் சில நடிவடிக்கைகளை எடுத்து இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாக்கள் இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்தி வைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதிபர் பதவிக்கு வந்தது முதலே H-1B விசாக்களுக்கான விதிமுறைகளில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார் ட்ரம்ப். தற்போது சொந்த மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகவும் கூறப்படுகிறது.
அதிபர் ட்ரம்ப் மேற்கொண்ட நடவடிக்கையால் இந்தியா மற்றும் சீனாவில் உள்ள இளம் பொறியாளர்கள் கடுமையாக பாதிக்கப் படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் கட்டிட வடிமைப்பு, கணிப்பொறி, மின்சாரம் சார்ந்த தொழில்நுட்ப வேலைகளுக்கு இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வருடம்தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அமெரிக்க கம்பெனிகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதில் இந்தியாவில் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் இளைஞர்கள் H-1B விசாக்களுக்காக விண்ணபித்து வருகின்றனர். தொழில் நுட்பம் சார்ந்த வேலை, மேற்படிப்பு போன்ற பல்வேறு தேவைகளுக்காக பல இந்திய இளைஞர்கள் அமெரிக்க கம்பெனிகளை நம்பியே இருக்கின்றனர்.
இதனால் தற்போது H-1B விசா பற்றிய விதிமுறையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்த திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கை வைக்கப் பட்டு வருகிறது. H-1B தவிர H-2B ஆசிரியர் மற்றும் பயிற்சி பணிகளுக்கு வழங்கப்படும் J பிரிவு விசாக்களுக்கும் இந்த ஆண்டு இறுதி வரை தடை நீடிக்கும் என அமெரிக்காவின் விசா வழங்கும் துறை அறிவிப்பு வெளியிட்ட இருக்கிறது. ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் அதிபர் தோற்று விட்டார் என்று எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச் சாட்டுகளை கூறிவருகின்றனர்.
இதைத்தவிர கறுப்பினத்தவர்கள் போராட்டத்தில் அதிபர் வெளியிட்ட கருத்துகளும் நாட்டு மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் H-1B விசாக்களுக்கான கெடுபிடிகளும் அதிகரித்து இருக்கிறது.. இதனால் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தங்களது விசாக்களை புதுப்பிக்க முடியாமலும், சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வருகின்றனர். இந்த அழுத்தங்கள் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் மீதான மதிப்பை குறைத்துவிடும் எனவும் சில தரப்புகள் விமர்சித்து வருகிறது. இந்நிலையில்தான் ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் நான் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டால் H-1B விசாக்களுக்கான தடை நீக்கப்படும் என்ற உறுதியை அளித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout