முடிவுக்கு வந்த அமெரிக்க அதிபர் தேர்தல்… அரியணையில் ஏறப்போகும் ஜனநாயகக் கட்சி!!!
- IndiaGlitz, [Tuesday,December 15 2020]
கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பெரும்பான்மை வாக்குகளுக்கும் அதிகமான இடங்களை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் பெற்றிருந்தாலும் பல்வேறு நெருக்கடி கொடுக்கப் பட்டதன் காரணமாக இதுவரை தேர்தல் முடிவு வெளியாகாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் 50 மாகாண வாக்களார்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தற்போது ஜோ பிடன் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த அறிவிப்பை அமெரிக்க தேர்வாளர்கள் குழு வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பிடன் 306 வாக்குகளையும் குடியரசு கட்சியைச் சார்ந்த டிரம்ப் 232 வாக்குகளையும் பெற்றுள்ளார் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்க உள்ளார். இதில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவி ஏற்க உள்ளார் என்பது மேலும் பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக டிரம்ப் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்து இருந்தார். இதில் பெரும்பாலான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது.
தற்போது டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ்க்கு அளித்த பேட்டியில், தேர்தல் முறைகேடு தொடர்பான தனது சில வழக்குகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டபோதிலும் மற்ற சில சவால்களை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்து உள்ளார். இதனால் டிரம்ப்பின் தேர்தல் போராட்டம் மேலும் இன்னும் முடிவடைய வில்லை எனச் சிலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.