ரிலையன்ஸ் ஜியோ-சாம்சங் கூட்டணியில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம்
- IndiaGlitz, [Wednesday,March 01 2017]
இந்தியாவில் செல்போன் உபயோகித்து வரும் பெரும்பாலானோர் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை 2ஜி தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி வந்தனர். ஒருசிலர் மட்டுமே 3ஜி தொழில்நுட்பத்தை உபயோகித்து வந்தனர். இந்நிலையில் கிட்டத்தட்ட 10 கோடி இந்தியர்களை நேரடியாக 4ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்றிய பெருமை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவுக்கு போய் சேர்ந்தது என்றால் அது மிகையல்ல.
ஒருசில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 3ஜி தொழில்நுட்பம் அதிக விலையில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற 4ஜி தொழில்நுட்பத்தை முற்றிலும் இலவசமாக அறிமுகம் செய்தது. இதனால் குறைந்த காலத்தில் ஜியோவுக்கு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் கிடைத்தது.
இந்நிலையில் இந்தியர்கள் கனவிலும் எதிர்பாராத 5ஜி தொழில்நுட்பத்தை அதிவிரைவில் ஜியோ அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் தென்கோரியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் உடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன்படி 5ஜி சேவைக்குத் தேவையான ஸ்மார்ட்போன்களை சாம்சங் தயாரித்து வழங்கும் என்றும், மற்ற சேவைப் பணிகளை ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை ஜியோ நிறுவனம் உறுதி செய்துள்ளதால் ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.