'ஜிந்தா' படத்தில் கார்த்திக் நடிக்கும் கேரக்டர்?

  • IndiaGlitz, [Sunday,September 06 2015]

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரி ஆன கார்த்திக், சமீபத்தில் வைபவ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்திலும் கார்த்திக் வில்லனாகத்தான் நடிக்கின்றார் என்ற தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

இயக்குனர் வசந்த் அவர்களிடம் உதவியாளராக இருந்த வெற்றிசெல்வன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'ஜிந்தா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கார்த்திக் மற்றும் வைபவ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படம் குறித்து வைபவ் கூறியபோது, 'கார்த்திக் அவர்களுடன் நடிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் எங்கள் இருவரின் கேரக்டர்களுமே முக்கியத்துவம் வாய்ந்தது. கார்த்திக் இந்த படத்தில் வில்லனாக நடித்தாலும், இதுவரை அவர் ஏற்றிராத வித்தியாசமான வேடம்' என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் இயக்குனர் வெற்றிசெல்வன் கூறியபோது, 'இந்த படத்தின் ஸ்கிரிப்டை நான் எழுதும்போதே கார்த்திக்கை மனதில் வைத்துதான் எழுதினேன். இதுவொரு காமெடி கலந்த கேங்ஸ்டார் படம். எனது எனர்ஜியான ஸ்கிரிப்ட்டுக்கு தேவையான எனர்ஜியை கார்த்திக் மற்றும் வைபவ் திரையில் கொண்டு வருவார்கள் என்று நான் கண்டிப்பாக நம்புகிறேன்' என்று கூறினார்.

வைபவ் ஜோடியாக 'இந்தியா பாகிஸ்தான்' படத்தில் நடித்த சுஷ்மா நடித்து வரும் இந்த படத்திற்கு ஹசார் காசிப் அவர்கள் இசையமைக்கின்றார் .இவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News