ஜீவி - புத்திசாலித்தனமான புது முயற்சி
எட்டு தோட்டாக்கள் படம் மூலம் அறிமுகமான வெற்றி இந்த ஜீவி படம் மூலம் புது முக இயக்குனர் வி.ஜெ. கோபிநாத்துடன் இணைந்திருக்கிறார். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்திருக்கும் இந்த படம் தரத்திலும் ஆழமான கருத்திலும் வெகுவாக கவர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கிறது.
வெற்றி, மதுரை பக்கத்திலுள்ள ஒரு சின்ன கிராமத்தில் வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞர் குடும்ப கஷ்டத்துக்காக சென்னைக்கு வேலை தேடி வருகிறார். அதிகம் படிக்காவிட்டாலும் செய்முறையில் ஆர்வமுள்ள அவர் ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்க்கிறார் அங்கு டீ மாஸ்டராக இருக்கும் கருணாகரனுடன் ஒரே வீட்டில் தங்குகிறார். கடைக்கு எதிரில் ரீ சார்ஜ் கடையில் வேலை பார்க்கும் இவர் காதலி ஒரு கட்டத்தில் அவருடைய வறுமையை காட்டி விலகி செல்ல விரக்தி அடைகிறான். இந்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய வீட்டு ஓனர் ரோகினி தன் கண் தெரியாத மகள் கல்யாணத்துக்கு சேர்த்து வைத்திருக்கும் நகைகளை அபகரிக்க வாய்ப்பு கிடைக்க தன்னுடைய புத்தக அறிவினால் பெற்ற புத்திசாலித்தனத்தை பயன் படுத்தி காரியத்தை கருணாகரன் துணை கொண்டு கச்சிதமாக முடிக்கிறார். போலீஸ் கண்ணிலேயே மண்ணை தூவி தப்பிக்கும் வெற்றிக்கு தான் செய்த கொள்ளைக்கும் ரோகினி குடும்பத்துக்கும் மற்றும் தன் இறந்த காலத்துக்கும் ஒரு முக்கோண சம்பந்தம் இருப்பதை உணர்கிறான். பின் என்ன நடந்தது என்பதை ஒரு அசத்தும் கிளைமாக்சில் சொல்லப்படுகிறது.
அதிகம் முக பாவனைகள் இல்லாமல் வரும் வெற்றி அந்த சரவணன் பாத்திரத்துக்கு அழகாக பொருந்தி போகிறார். தந்தையிடம் பாசம், தாயிடம் கொஞ்சம் வெறுப்பு, தன்னைவிட அறிவு கம்மியான நண்பனை கையாள்தல் மற்றும் தன் வாசிப்பு அறிவை வைத்து பல உயரிய தத்துவங்களை சுலபமாக விளக்குவது என அணைத்து இடங்களிலும் பாஸ் மார்க் வாங்குகிறார். கருணாகரன் கிட்ட தட்ட ஒரு இரண்டாம் கதாநாயகன் போல வளம் வந்து பார்வையாளர்களின் கேள்விகளை சேர்த்து எழுப்பி புரிய வைக்கிறார். ரோகினி ராமா மற்றும் மைம் கோபி ஆகிய அனுபவ நடிகர்கள் தங்கள் முக்கியமான பாத்திரங்களை உணர்ந்து நடித்துஇருக்கிறார்கள்/ வெற்றியை காதலிக்கும் பெண் மற்றும் அவர் கை பிடிக்கும் பெண் என இருவருக்கும் திரை நேரம் கம்மியென்றாலும் திரைக்கதையின் இரண்டு முக்கிய திருப்பங்களுக்கு அவர்கள் உதவுகிறார்கள்.
ஜீவி படத்தில் மிகவும் கவர்வது கதாசிரியர் மற்றும் இயக்குனர் சொல்லும் அந்த தொடர்பியல் சம்பத்தப்பட்ட ஆழமான கருதும் அதை திரை வடிவமாக்கிய விதமும். உயர்ந்த தத்துவங்களை கூட சுலபமான மொழியில் விளக்கும் அந்த யுக்தியும் பாராட்டத்தகுந்தவை உதாரணத்திற்கு மின் விசிறியை வைத்து சொல்லப்படும் கருது மற்றும் தல அஜித்தின் மங்காத்தா படத்தின் காட்சியை வைத்து விளக்கும் இடமும். ரோகினி குடும்பம் மற்றும் கதாநாயகன் குடும்பம் மற்றும் அவர்கள் கடந்த காலம் எப்படி பின்னி பிணைந்திருக்கிறது என்பதை மிக நேர்த்தியான கிளைமாக்சில் கூறிய விதம் மிகவும் அருமை. கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு ஏழையின் சந்ததிக்கு பணம் பொய் சேரும்போது ஜீவி உயர்ந்து நிற்கிறார்.
குறைகள் என்று பார்த்தால் விறுவிறுப்பாக நகர திரைக்கதையில் இடம் இருந்தும் படத்தை ஆமை வேகத்தில் சொல்லி சில இடங்களில் பொறுமையை சோதிக்கிறார்கள். போலீஸ் விசாரணை படு மொக்கையாக இருப்பது இடைவேளைக்கு பிறகு ஆடியன்ஸுக்கு வரவேண்டிய பதைபதைப்பு துளியும் இல்லாமல் போக வழி செய்துவிடுகிறது.
பாபு தமிழின் வசனங்கள் ஜீவிக்கு மிக பெரிய பலம் அதே போல் பின்னணி இசை படத்தொகுப்பு என மற்ற தொழில்நுட்பங்களும் பளிச். புதுமுக இயக்குனர் வி ஜெ கோபிநாத் ஒரு புதுமையான கதை கருவை கையில் எடுத்து அதை கம்மி பட்ஜெட்டில் தன்னால் முடிந்த அளவு நேர்த்தியாக சொல்லி தமிழ் சினிமாவின் கவனிக்க படும் இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார்.
புது கதை களத்தோடு நேர்த்தியான திரைவடிவம் பெற்றிருக்கும் இந்த ஜீவியை நிச்சயம் தியேட்டரில் பார்த்து புது அனுபவத்தோடு ரசிக்கலாம்.
Comments