பதக்கத்தை தவறவிட்ட… ஹாக்கி வீராங்கனைகளுக்கு ஜார்கண்ட் கொடுக்கும் அசத்தலான பரிசு!

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள் அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறினர். பின்னர் அரையிறுதிக்கு தகுதிபெறாத நிலையில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டன் வீராங்கனைகளுடன் கடுமையாகப் போராடியும் வெற்றிப்பெற முடியவில்லை.

இதனால் நொந்துபோன வீராங்கனைகள் ஹாக்கி களத்திலேயே அழுது புரண்ட காட்சி ரசிகர்களிடம் கடும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதோடு துவண்டுபோன இந்திய வீராங்கனைகளை, பிரிட்டன் வீராங்கனைகள் சிலர் தேற்றிய காட்சியும் சமூக வலைத்தளங்களில் படு வைரலானது.

இதனால் மகளிர் ஹாக்கி அணி பதக்கத்தை நழுவவிட்டப் பின்பும் இந்திய ரசிகர்கள் அவர்களை கொண்டாடி வருகின்றனர். மேலும் பதக்கத்தை தவறவிட்டாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகக் கூறியிருக்கும் ஜார்கண்ட் அரசு தனது மாநிலத்தில் இருந்து கலந்துகொண்ட ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

அதோடு பழைய வீடுகளை வைத்திருக்கும் வீராங்கனைகளுக்கு நவீன வசதிகளுடன் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் ஜார்கண்ட் அரசு தெரிவித்து இருக்கிறது. முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி அணி இந்தியாவிற்காக 41 ஆண்டுகளுக்குப்பிறகு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத்தந்தது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கலந்துகொண்ட வீரர்களுக்கு தலா 1 கோடி பரிசுத்தரப்படும் என அம்மாநில அரசு செய்தி வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.