'ஆர்.ஆர்.ஆர்' ஹீரோவுடன் ஜான்வி கபூர் நடிப்பது உண்மையா? போனிகபூர் விளக்கம்

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக கூறப்படும் செய்தி குறித்து போனிகபூர் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் ’வலிமை’ படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட போனிகபூரிடம், ‘ஜூனியர் என்டிஆர் நடிப்பில் புஜ்ஜிபாபு இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது போனிகபூர் கூறிய போது, ‘ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் ஒவ்வொரு வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு வெளிவரும் வகைகளில் ஒன்றுதான் ஜான்வி கபூர் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுவது என்றும் அதில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் ஸ்ரீதேவியின் ரசிகர்கள் ஜான்வி கபூர் எப்போது தெலுங்கு திரையுலகில் அறிமுகமாவார் என்று கேட்டு வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே விரைவில் தெலுங்கு திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடிப்பது உறுதி என்பது போனிகபூரின் இந்த தகவல்களில் இருந்து தெரியவருகிறது.