பத்ம விருதை மறுத்த கமல்-ரஜினி பட வசனகர்த்தா

  • IndiaGlitz, [Tuesday,January 26 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி உள்பட பலருக்கு நேற்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் பத்ம விருதை வேண்டாம் என தமிழ் திரைப்பட பிரபலம் ஒருவர் மறுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர் வேறு யாரும் அல்ல. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் என்பவர்தான். இவர் ரஜினியின் '2.0 , கமல்ஹாசனின் 'பாபநாசம்' உள்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மஸ்ரீ விருதை தான் ஏற்க மறுத்ததாக அவர் இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கம் பின்வருமாறு:

பத்மஸ்ரீ விருது குறித்து பலகோணங்களில் கடிதம் எழுதியவர்கள் அனைவருக்கும் பொதுவாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

சில விளக்கங்கள்:

1. இது அரசுக்கு எதிரான நிலைப்பாடெல்லாம் அல்ல. நான் உடனடி அரசியலில் ஈடுபடுவதும் ,கட்சி நிலைப்பாடுகள் எடுப்பதும் எழுத்தாளனின் இயல்புக்கு மாறானது என நினைப்பவன்.

2. மேலும் விருதை அளிப்பது அரசு அல்ல. அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் தேசம். ஏனென்றால் இது இந்திய மக்களால் ஜனநாயகமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு.

3. மறுப்பை ஏன் அறிவிக்கவேண்டும் என்றால் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டதும் காவல்துறைவிசாரணை வரையிலும் இலக்கியசூழலிலேயே அனைவருக்கும் முன்னரே தெரியும் என்பதனால்தான். இதன்பொருட்டே வெண்முரசு எழுதப்படுகிறது என்று பேசப்பட்டது.இப்போது இதை அறிவிக்காவிட்டால் நான் இதற்காக முயன்று அதுகிடைக்கவில்லை என பேச ஆரம்பிப்பார்கள்

4. என் நோக்கம் வெண்முரசு என்னும் படைப்பு முன்னிற்கவேண்டும் என்பதுதான். அது எவ்வகையிலும் சிறுமைப்படுத்தப்படலாகாது. அது இலக்கியம் மட்டும் அல்ல.

இதைப்பற்றி இனிமேல் எந்த வினாக்களுக்கும் விடையோ விளக்கமோ அளிக்கப்போவதில்லை. நன்றி
ஜெ

இவ்வாறு எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கமளித்துள்ளார். ஜெயமோகனின் இந்த முடிவுக்கு இயக்குனர் வசந்தபாலன் உள்பட பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.