கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை கடத்திய இந்திய விமான பணிப்பெண் கைது
- IndiaGlitz, [Thursday,January 11 2018]
இதுவரை விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமே கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விமான பணிப்பெண் ஒருவரே கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து ஹாங்காங் செல்லும் விமானத்தில் 25 வயது தேவ்ஷி குல்ஷ்ரேஷ்தா என்ற விமான பணிப்பெண் பணிபுரிந்து வந்தார். இவர் சமீபத்தில் விமான பணியில் இருந்தபோது அந்த விமானத்தில் திடீரென நுழைந்த உளவுத்துறை அதிகாரிகள் தேவ்ஷியின் பொருட்களை சோதனை இட்டனர்.
அதில் அவருடைய மேக்கப் பெட்டியில் கட்டுக்கட்டாக சில்வர் பாயில் பேப்பரில் சுற்றி வைக்கப்பட்ட அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கபப்ட்டன. இவற்றின் மதிப்பு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தேவ்ஷி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 'இந்த பணத்தை ஹவாலா கடத்தல்காரர் அமித் மல்ஹோத்ரா தூண்டுதலின்பேரில் தேவ்ஷி கடத்தியதாகவும், இதற்காக அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கமிஷன் கொடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இதேபோல் சென்னை உள்பட மற்ற நகரங்களிலும் அமெரிக்க டாலர்கள் கடத்தப்பட்டு அதற்கு பதிலாக தங்கம் மற்றும் வெள்ளியாக இந்தியாவுக்கு திருப்பி வரவழைக்கப்படுவதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.