வேலையை ராஜினாமா செய்த உலகின் இராண்டாவது பெரிய பணக்காரர்!

  • IndiaGlitz, [Wednesday,February 03 2021]

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி எனப் பல பதவிகளை வகித்து வரும் ஜெஃப் பெசோஸ் தன்னுடைய சிஇஓ பதவியில் இருந்து விலக உள்ளார் என்ற பரபரப்பு தகவலை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்து வரும் அமேசான் நிறுவனத்தின் சொந்தக்கரரான இவர் அந்நிறுவனத்தின் சிஇஓவாகவும் பணியாற்றி வருகிறார். மேலும் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சிஇஓ பதவியில் இருந்து பணி நிறைவு பெற்று தொடர்ந்து அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பொறுப்பில் செயல்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. இவருக்குப் பதிலாக அந்நிறுவனத்தின் இளையதள பொறுப்புகளை நிர்வகித்து வரும் ஆண்டி ஜெசி என்பவர் அமேசான் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பு ஏற்பார் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உலகின் பெரிய பணக்காரர் என்ற அடையாளத்தை பெற்ற இவரின் சொத்து மதிப்பு கொரோனா காலத்திலும் அதிகரிக்கவே செய்தது. இதனால் கடந்த 2020 ஜனவரி மாதத்தில் 115 பில்லியன் டாலராக இருந்த இவருடைய சொத்து மதிப்பு தற்போது 220 பில்லியனை எட்டி இருக்கிறது. என்றாலும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சந்தை மதிப்பில் உச்சத்தை எட்டியதால் உலகின் பெரிய பணக்காரராக எலான் மஸ்க் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் ஜெஃப் பெசோஸ் உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் அமேசான்.காம் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து அதன் சிஇஓ வாக பணியாற்றி வந்தார். தற்போது அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்று நிர்வாகத் தலைவராக மட்டும் நீடிப்பார் எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு உலகின் பெரிய பணக்காரராக அறியப்பட்ட பில்கேட்ஸ்ஸும் சிஇஓ பதவியில் இருந்து ஓய்வு பெற்று அவருடைய நிறுவனத்தின் நிர்வாக குழுவில் மட்டும் செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.