அரசியலில் இருந்து விலகிய தீபாவின் முடிவில் திடீர் மாற்றம்!

  • IndiaGlitz, [Monday,August 19 2019]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். முதலில் அதிமுகவில் இணைவதாக தெரிவித்த அவர் பின்னர் தனிக்கட்சி ஆரம்பித்தார். அந்த கட்சியில் இருந்து கணவரையே நீக்கினார். பின்னர் டிரைவருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து அவரையும் கட்சியில் இருந்து நீக்கினார்.

இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென அரசியலில் இருந்து விலகுவதாகவும், தன்னை யாரும் இனிமேல் தொண்டர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் முழுக்க முழுக்க குடும்ப வாழ்க்கையில் ஈடுபட போவதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவரை நம்பியிருந்த தொண்டர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்த ஒரே மாதத்தில் மீண்டும் அரசியலில் நுழைய விருப்பப்படுவதாகவும், தன்னுடைய கட்சியை அதிமுகவுடன் இணைக்க விரும்புவதாகவும் அறிவித்துள்ள தீபா, இதுகுறித்து அதிமுக தலைமைக்கு கடிதமும் எழுதியுள்ளார். அதிமுக தலைமையிடம் இருந்து பதில் வந்த பின்னர் தீபாவின் அடுத்தகட்ட நடவடிக்கை தெரிய வரும் என அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.