ஐபிஎல் ஏலத்தில் ஒரு இலங்கை வீரர் கூட இல்லை ஏன்? உண்மையை உடைக்கும் முன்னாள் வீரர்!

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது. இதுவரை 13 சீசன்கள் நடந்து முடிந்து விட்டன. இந்நிலையில் 14 சீசன் போட்டிகளுக்கான மினி ஏலம் கடந்த 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் உள்நாட்டு வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 291 கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் 8 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தன.

இதில் உச்சப்பட்சமாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிறிஸ் மோரிஸ் 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதேபோல வெளிநாட்டு வீரர்களான கைல் ஜாமிசன் (15 கோடி), ஜெய் ரிச்சர்டஸன் (14 கோடி), மெரிடித் (8 கோடி) போன்றோரும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். மொத்தம் 20 வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் 14 ஆவது சீசனுக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட நிலையில் ஒரு இலங்கை வீரர் கூட இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

முன்னதாக இசுரு உடானா, திசாரா பெரேரா போன்ற இலங்கை வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்று இருந்தாலும் இந்த முறை ஒரு வீரர்கள் கூட இடம்பெறவில்லை. இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஜெயவர்தனே தன்னுடைய கருத்துத் தெரிவித்து இருக்கிறார். “ஐபிஎல் ஏலத்தில் ஒரு இலங்கை வீரர்கூட இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. இந்த ஏலத்தில் 20 வெளிநாட்டு வீரர்களை எடுக்க மட்டுமே இடம் இருந்தன. இதில் அனைத்து ஐபிஎல் அணிகளும் வேகப்பந்து மற்றும் ஆல்ரவுண்டர்களை குறி வைத்தனர். இதுபோன்ற திறமை இலங்கை வீரர்களிடம் சற்று குறைவாக இருக்கிறது.

மேலும், உலகக் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களை பெற முயற்சிக்கும் இடமாக தற்போது ஐபிஎல் உருவாகி உள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஆட்டத்தை உயர்த்தி போட்டித் தன்மையுடன் இருப்பதற்கும் இந்த ஐபிஎல் ஒரு சிறந்த தளமாக இருக்கும். இதனால் அவர்கள் தகுதி அடிப்படையில் ஐபிஎல் போட்டிகளில் பகுதியாக இருக்க முடியும்” என்று தெரிவித்து உள்ளார்.