மனைவியிடம் இருந்து விவாகரத்து: குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஜெயம் ரவி..!

  • IndiaGlitz, [Tuesday,September 10 2024]

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் என்பவரது மகள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. மேலும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக கூறப்பட்ட நிலையில் நேற்று ஜெயம் ரவி தனது சமூக வலைத்தளத்தில் மனைவி ஆர்த்தியை பிரிவதாகவும் இந்த முடிவு மிகவும் கடினமாக எடுக்கப்பட்டதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள செய்தியின்படி மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் ’2009 ஆம் ஆண்டு பதிவு செய்த எங்களின் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 10ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வருகிறது என செய்திகள் வெளியாகி உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், பிறந்த நாளில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.