'போயஸ் கார்டன்' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவி!

  • IndiaGlitz, [Thursday,February 28 2019]

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்த 'அடங்கமறு' திரைப்படம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவர் தற்போது 'கோமாளி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளர் நடிகை காஜல் அகர்வால். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த படத்தை அடுத்து அவர் மோகன் ராஜா இயக்கவுள்ள 'தனி ஒருவன் 2' படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் ஸ்க்ரீன் சீன் மீடியா என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம் ரவி தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த செய்தியை ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்திலும் பதிவாகியிருந்தது. ஆனால் ஒருசில ஊடகங்கள் இந்த மூன்று படங்களுக்கான சம்பளத்திற்கு பதிலாக ஜெயம் ரவிக்கு, தயாரிப்பாளர் தரப்பு போயஸ் கார்டனில் ஒரு வீடு ஒன்றை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியிட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த் உள்பட பல விவிஐபிக்களின் வீடு உள்ள போயஸ் கார்டனில் வீடா? என பலர் ஆச்சரியமாக பார்த்தனர்.

இந்த நிலையில் இந்த செய்திக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். போயஸ் கார்டனில் வீடு பெற்றதாக வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் வதந்தி என்றும், ஒரு செய்தியை வெளியிடும் முன் அதனை சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு வெளியிட வேண்டும் என்றும் கூறி கடந்த இரண்டு நாட்களாக பரவி வந்த வதந்திக்கு ஜெயம் ரவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.