கேன்ஸ் படவிழாவில் 'சங்கமித்ரா'வின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

  • IndiaGlitz, [Thursday,May 18 2017]

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றான 'சங்கமித்ரா' படம், 'பாகுபலி' படத்தை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் சரித்திர படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று பிரான்ஸ் நாட்டில் தொடங்கிய கேன்ஸ் படவிழாவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்கு பின்னர் உலகமே தென்னிந்தியா பக்கம் திரும்பி பார்த்துள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை கேன்ஸ் படவிழாவில் வெளியிட்டது, உலக வியாபார மார்க்கெட்டை எளிதில் ஈர்க்கும் ஒரு புத்திசாலித்தனமான புரமோஷன் என்றே கருதப்படுகிறது.

ஒரு கையில் வாளும் இன்னொரு கையில் குதிரையின் கடிவாளத்தையும் பிடித்து கொண்டு கம்பீரமாக ஸ்ருதிஹாசன் குதிரையின் மேல் உட்கார்ந்திருக்கும் இந்த ஃபர்ஸ்ட்லுக் ஸ்டில், படத்தின் பிரமாண்டத்தை ஆச்சரியத்துடன் வெளிப்படுத்துகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சாபுசிரில் கலை வண்ணத்தில், கமலக்கண்ணன் கிராபிக்ஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.