ஜெயலலிதா கட்டிகாத்த அதிமுகவை நிச்சயம் காப்பாற்றுவேன். தீபா அதிரடி பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,December 20 2016]

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த சில நாட்களாகவே ஊடகங்களில் பரபரப்பாக பேட்டி அளித்து வரும் நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவருடைய பேட்டி ஒளிபரப்பானது.

அந்த பேட்டியில் அவர் பல கருத்துக்களை மனம் திறந்து கூறியுள்ளார். தான் பிறந்தவுடன் தனக்கு 'தீபா' என்று பெயர் வைத்தது அத்தை ஜெயலலிதாதான் என்றும் தன்னை அவரே தன்னுடைய பாதுகாப்பில் வளர்க்க விரும்பியதாகவும் கூறினார்.

பத்து வயது வரை போயஸ் தோட்டத்தில் வளர்ந்த தான், பின்னர் பெற்றோருடன் சென்றுவிட்டதாகவும், சசிகலாவுடன் ஏற்பட்ட உறவுக்கு பின்னர் தங்கள் குடும்பத்திற்கும் அத்தைக்கும் விரிசல் ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தை ஜெயலலிதா வளர்ப்பு மகன் முடிவு எடுத்ததில் தனது தந்தைக்கும் அத்தைக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இந்த சம்பவத்திற்கு பின்னர் தனது தந்தையின் உடல்நிலை மோசமானதாகவும் அவர் பதிவு செய்தார்.

மேலும் 2004ஆம் ஆண்டு தான் கடைசியாக போயஸ் கார்டனுக்கு சென்று கடைசியாக அத்தையை பார்த்ததாகவும், அதன்பின்னர் சிறு இடைவெளிக்கு பின்னர் 2007ஆம் ஆண்டு போயஸ் கார்டனுக்கு சென்று அவரை பார்க்க முயற்சித்த போது அங்கிருந்தவர்கள் தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும், இன்டர்காம் மூலம் மட்டுமே அத்தையிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

தன்னுடைய திருமணம் முழுக்க முழுக்க அத்தையின் விருப்பத்தின்பேரிலே ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், ஆனால் கடைசி நேரத்தில் தன்னுடைய திருமணத்திற்கு அவர் வரவில்லை என்றும் இதற்கும் அவருடன் இருந்தவர்களே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே அரசியலில் சேர விரும்பியதாகவும், ஆனால் அதிமுக உறுப்பினராக கூட சேர முடியாத நிலை சிலரால் ஏற்பட்டதாகவும் தீபா கூறினார். அதிமுக என்ற கட்டுக்கோப்பான கட்சிக்காக தனது அத்தை பல தியாகங்களையும் போராட்டங்களை சந்தித்து உருவாக்கியுள்ளதாகவும், அதை காக்க வேண்டிய நிலை வரும் பட்சத்தில் கண்டிப்பாக தான் அரசியல் களத்தில் இறங்கி அவரது பெயர் மற்றும் புகழை காப்பாற்றுவேன் என்றும் தீபா உறுதியுடன் கூறியுள்ளார்.