முதலமைச்சர்-நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பில் நடந்தது என்ன?
- IndiaGlitz, [Monday,November 16 2015]
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை நடிகர்சங்கத்தின் நிர்வாகிகள் இன்று சந்தித்து வெள்ள நிவாரண நிதியளிக்க உள்ளதாக காலையில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் முதல்வரை சந்தித்த பின்னர் நடிகர் சங்கத்தின் சார்பில் பத்திரிகையாளர்களுக்காக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக, அதன் நிர்வாகிகளாக தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், உபதலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் மாண்புமிகு முதலமைச்சரை சந்தித்தனர். அவர்களை முதலமைச்சர் மகிழ்வோடு வரவேற்று, அக்கறையோடு சங்கத்தின் நிலையை கேட்டறிந்து கொண்டு, புதிய நிர்வாகத்தை மனதார வாழ்த்தினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் திலகம் திரு.சிவாஅஜி கணேசன், திரு.மேஜர் சுந்தர்ராஜன் நிர்வாகத்தில் இருந்த பொற்காலத்தை, இந்த புது நிர்வாகம் மீண்டும் கொண்டு வர வேண்டும். இந்த புதுநிர்வாகம் அதை செய்யுமென்ற நம்பிக்கை இருக்கிறது. சங்கத்தின் வளர்ச்சிக்காக அரசின் முழு ஆதரவு இருக்குமென்றும் கூறினார்.
சங்கத்தின் புதுக்கட்டிடத்திற்காக அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று பொதுச்செயலாளர் விஷால் அவர்கள் வெண்டுகோள் வைக்க புன்சிரிப்போடு முதலமைச்சர் முன்கூட்டியே அந்நாளை தெரிவிக்குமாறும், கண்டிப்பாக கலந்து கொள்வதாகவும் உறுதி கூறினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.