ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டும் கின்னஸ் சாதனை காவலர்

  • IndiaGlitz, [Friday,December 09 2016]

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் சொகுசு வாழ்க்கை அனுபவித்த பலர் அவரை அடுத்த நாளே மறந்துவிட்ட நிலையில் அவரால் எந்த உதவியும் பெறாத பலர் அவர் மீது வைத்துள்ள உண்மையான அன்பை தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது காவலர் பணியில் உள்ள ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு ஜெயலலிதாவுக்காக கோவில் கட்டும் பணியை விரைவில் தொடங்கவுள்ளார்.

கடந்த 1999 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வீட்டின் காவலராக பணியாற்றிய வேல்முருகன் என்பவர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது காசி சென்று சிறப்பு பூஜைகள் செய்துள்ளார். அவர் காசியில் இருந்து திரும்பிய தினத்தில்தான் ஜெயலலிதாவின் மறைவு செய்தியும் அவருக்கு கிடைத்துள்ளது.

அதிமுக எதிர்காலத்தில் என்ன ஆகும் என்பது குறித்து தனக்கு கவலை இல்லை என்றும் அம்மாதான் தனது கடவுள், அதனால்தான் அவருக்கு கோவில் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் இதற்காகவே தான் பார்த்து வந்த காவலர் பணியையும் ராஜினாமா செய்துள்ளதாவும் வேல்முருகன் கூறியுள்ளார்.

81 மணி நேரம் ஒற்றை காலில் நின்றது, பெரியார் ஆற்றில் 157 கி.மீட்டர் தொலைவு நீந்தி சென்றது, 81 அடி உயரத்தில் இருந்து 4 அடி ஆழ டேங்க் நீரில் குதித்தது உள்பட இதுவரை 14 கின்னஸ் சாதனைகளை புரிந்துள்ள வேல்முருகன் விரைவில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்ட நிலத்தை தேர்வு செய்து வேலையை ஆரம்பிக்கவுள்ளாராம்.