புதுக்கட்சி தொடங்குகிறார் தீபா. தீபக்கிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம். என்ன ஆச்சு தமிழ்நாட்டுக்கு?
- IndiaGlitz, [Thursday,February 23 2017]
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நாளை ஜெயலலிதாவின் பிறந்த நாளில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும், கட்சியின் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாளை மாலை 6 மணிக்கு புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தீபா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நானும் ஓபிஎஸ் அவர்களும் இணைந்து செயல்படுவோம் என்று கூறிய தீபா, திடீரென தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவை எடுத்ததன் மர்மம் தெரியவில்லை. ஓபிஎஸ் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டாம் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறியதாகவும், தங்களது தனித்தன்மையை விட்டுக்கொடுக்க கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியதாலும் தீபா தனிக்கட்சி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுவரை சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகனும், தீபாவின் சகோதரருமான தீபக், திடீரென அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் அளித்த பேட்டின் ஒன்றில், 'ஓபிஎஸ் அவர்களை அண்ணன் என அழைத்த தீபக், தினகரனை கட்சியினர் ஏற்க மாட்டார்கள் என்றும் தீபாவுடன் தனக்கு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும் தீபக் தெரிவித்தார். இந்த நிலையில் நாளை முதல் ஓபிஎஸ் அவர்கள் மக்களை சந்திக்க தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளார்.
ஒரு பக்கம் ஓபிஎஸ் சுற்றுப்பயணம், இன்னொரு பக்கம் தீபாவின் புதுக்கட்சி, இதற்கிடையே தீபக்கிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம் ஆகியவை அடுத்தடுத்து நடந்துள்ளதால் மீண்டும் தமிழகம் 'பிரேக்கிங் நியூஸ்' காய்ச்சலில் மூழ்கியுள்ளது.