ஜெயக்குமார் தலைமையில் மேலும் ஒரு அதிமுக அணியா? பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,June 05 2017]

எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் ஆலமரம் போன்று கட்டிக்காக்கப்பட்ட அதிமுக ஏற்கனவே சசிகலா அணி, ஓபிஎஸ் என பிளவுபட்டு இருக்கும் நிலையில் மேலும் ஒரு புதிய அணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஜாமீன் பெற்று சென்னை திரும்பியுள்ள டிடிவி தினகரன், ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஆலோசனை செய்ய இன்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்கின்றார். இந்த சந்திப்புக்கு பின்னர் அதிரடி அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தலைமைச்செயலகத்தில் ஜெயக்குமார் அறையில் மூத்த அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் இறங்கியுள்ளனர். இந்த ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை என்றாலும் மூத்த அமைச்சர்கள் சிவி சண்முகம், ராஜலட்சுமி, செங்கோட்டையன், தங்கமணி, ஜெயகுமார், வெல்லமண்டி நடராஜன், சரோஜா, மணிகண்டன், ஓ.எஸ்.மணியன், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தினகரனிடம் இருந்து ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களை நீக்கும் அறிவிப்பு வெளிவந்தால் ஜெயக்குமாரிடம் இருந்து பதிலடி அறிவிப்பு வரும் என்று அதிமுக அம்மா அணி வட்டாரங்கள் கூறுகின்றனர். முதல்வர் பழனிச்சாமி அவர்கள் தினகரன் விஷயத்தில் மெளனம் காப்பது மேலும் குழப்பத்தை தருவதால் அதிமுக அம்மா அணி மேலும் உடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.