140 கி.மீ தூரத்தில் பந்துவீசிய பும்ரா… கால் சறுக்கி வலியால் துடிதுடித்த சம்பவம்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அந்நாட்டு செஞ்சூரியனில் விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியே வருகின்றனர். இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு காலில் காயம் ஏற்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இருந்துவரும் ஜஸ்பிரித் பும்ரா தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நேற்றைய போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்தப் பிறகு 11 ஆவது ஓவரில் பந்துவிசி வந்தார். அவருடைய ஒவ்வொரு பந்தும் 140 கி.மீ வேகத்தில் சீறிப்பாய்ந்தது. அப்போது ஒரு பந்தை வீசிவிட்டு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயன்றபோது பும்ராவின் வலது கால் மடக்கி சரிந்து கீழே விழுந்தார்.

இதனால் வலியில் துடித்த பும்ராவை சக வீரர்கள் தேற்றினர். அதைத்தொடர்ந்து இந்திய அணியின் மருத்துவக் குழு அவரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து இந்திய ரசிகர்கள் தங்களது வருத்ததை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வேகப்பந்து மட்டுமே எடுபடும் தென்னாப்பிரிக்க பிட்சை பொறுத்தவரைக்கும் பும்ராவின் பங்கு அளப்பரியதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதையடுத்து முகமது ஷமி மற்றும் சிராஜ் இருவர் மட்டுமே அணியில் பலமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதல் நாள் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 120 ரன்களை எடுக்க, இந்தியா 3 விக்கெட்டுகளுடன் 272 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து 2 ஆவது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 3 ஆவது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி வெறும் 55 ரன்களை எடுத்த நிலையில் ஆல் அவுட்டாகினர். இதனால் 327 ரன்களுடன் இந்தியா முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது.

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவை முகமது ஷமியும் பும்ராவும் புரட்டி எடுத்தால் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து 130 ரன்கள் முன்னிலையுடன் தற்போது இந்தியா ஆடிவருகிறது. இந்தத் தருணத்தில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு காலில் காயம் ஏற்பட்ட சம்பவம் கடும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.