சுய ஊரடங்கு உத்தரவு எதிரொலி: தெருவில் நடந்த திருமணம்
- IndiaGlitz, [Sunday,March 22 2020]
இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதை அடுத்து இந்த சுய ஊரடங்கு உத்தரவு தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பேருந்துகள் ரயில்கள் உள்பட அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளதால் எந்தவித போக்குவரத்தும் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் இன்றைய தேதியில் நடக்கவிருந்த ஏராளமான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவில்கள் மட்டும் கல்யாண மண்டபங்கள் மூடப்பட்டுள்ளதால் வேறு வழியின்றி ஏற்கனவே ஏற்பாடு செய்த திருமணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் ஒரு சில திருமணங்கள் மட்டும் கோவிலுக்கு வெளியே நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் விருத்தாச்சலம் அருகே உள்ள ஒரு கோவிலில் ஒரு ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெற திட்டமிட்டிருந்தது. ஆனால் கோவில் நிர்வாகம், திருமணத்தை ஒத்தி வைக்கவும் என்றும் கோவில் இன்று திறக்கப்படாது என்றும் அறிவுறுத்தினார்கள்.
ஆனால் மணமக்களும் மணமக்களின் உறவினர்கள் இன்றைய தினம் திருமணம் நடத்தியே தீர வேண்டும் என்று முடிவு செய்து கோவில் வாசலிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர், கோவிலுக்கு வந்திருந்த உற்றார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சாலையோரத்தில் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.