ரூ.38 ஆயிரம் கோடிக்கு மின்கட்டண பில் அனுப்பிய மின்வாரிய துறை

  • IndiaGlitz, [Monday,August 14 2017]

மின்வாரிய கட்டணம் சில சமயம் திடீரென லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் வந்து வீட்டின் உரிமையாளரின் மாரடைப்புக்கு காரணமாக அமையும், அந்த வகையில் சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒருவருக்கு ரூ.38 ஆயிரம் கோடி மின்கட்டண பில் வந்துள்ளது.

ஜாம்ஷெட்பூரில் வசித்து வரும் பி.ஆர். குஹா என்பவரது வீட்டில் மின்கட்டணம் கட்டவில்லை என்று கூறி மின் இணைப்பை துண்டித்துவிட்டனர். அதன்பின்னர் குஹா மின்சார அலுவலகம் சென்று மின்கட்டணம் எவ்வளவு என்று கேட்டபோது மின்வாரிய அதிகாரிகள் அளித்த பதில் அதிர்ச்சியை ஊட்டியது. அவர்கள் கூறிய கட்டணம் ரூ.38 ஆயிரம் கோடி.

இதுகுறித்து குஹா மின்வாரிய அதிகாரிகளிடம் கூறியபோது, 'மூன்று அறைகள் கொண்ட வீட்டில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்களது வீட்டில் 3 மின்விசிறிகள் இருக்கின்றன. அவற்றுடன் மின் விளக்குகள் மற்றும் டி.வி. ஒன்றும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய தொகை மின்சாரக் கட்டணமாக வந்தது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில மின்சார வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து பேசிய குஹாவின் மகள் ரத்னா பிஸ்வாஸ், என் பெற்றோர்கள் இருவருமே உடல் நலமில்லாதவர்கள். மின்கட்டண ரசீது விவகாரத்தில் பக்கத்து வீட்டார் உதவி இருந்ததால்தான் புகார் அளிக்க முடிந்தது என்று வேதனையுடன் கூறினார்.