நடிகையர் திலகத்தையே மிஞ்சும் நடிப்பு.. பால் தினகரன் மனைவி வீடியோவுக்கு ஜேம்ஸ் வசந்தன் கண்டனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பால் தினகரன் மனைவி இவாஞ்சலி என்பவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் மிகவும் கஷ்டத்தில் இருந்ததாகவும், கனடாவில் சொந்த வீடு வாங்க முடியாமல் ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில் கர்த்தர் தான் வீடு வாங்க வழிவகை செய்ததாகவும், அதுமட்டுமின்றி இரவில் தான் தூங்கிக் கொண்டிருந்தபோது தேவதை கனவில் வந்து என்ன கார் என்று கேட்டதாகவும் மறுநாளே அந்த காரை தனது வாங்கி கொடுத்ததாகவும் இதற்கெல்லாம் காரணம் கர்த்தருக்கு நாங்கள் செய்த பிரேயர் என்றும் கூறியிருந்தார்
இந்த நிலையில் பால் தினகரன் மனைவி இவாஞ்சலின் வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூலில் கூறியிருப்பதாவது:
அண்மையில் நீங்கள் பேசியிருந்த ஒரு காணொலி என் கவனத்துக்கு வந்தது. இந்த காணொலி கிறிஸ்தவர் மட்டுமல்லாது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் அது நேர்மறையான காரணத்துக்காக அல்ல; ஏளனத்துக்கும் நகைப்புக்கும். இந்தக் கேலியும் கிண்டலும் உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தைப் பற்றியோ தனிப்பட்ட விதத்தில் இருந்திருந்தால் என்னை ஒன்றும் பாதித்திருக்காது. உங்களுக்காக கொஞ்சம் பரிதாபப்பட்டுவிட்டு, என் வேலையைப் பார்த்திருப்பேன். ஆனால், அது ஆண்டவரையும், ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் தவறாக காட்டியதால் இந்தப் பகிர்வு.
உங்கள் குடும்பம் எவ்வளவு செல்வாக்கான குடும்பம் என்பது உலகத்துக்கே தெரியும். உங்கள் மாமனார் காலத்திலிருந்து இன்று உங்கள் பேரப்பிள்ளைகள் வரை அத்தனை பேரும் எப்படிப் படாபடோமான செல்வ செழிப்பில் திளைக்கிறவர்கள் என்பது மறைக்கவே இயலாத உண்மை. உலகப் பணக்காரர் பட்டியலில் ஏன் உங்கள் குடும்பத்தின் பெயர் வருவதில்லை என்று நாங்கள் வியப்பதுண்டு!
உங்கள் குடும்பம் எதற்கு, எப்படி கனடா நாட்டுக்குச் சென்றது; அந்தக் குடியுரிமை எப்படி வாங்கினீர்கள்; பின் எதற்காக, எப்படி அமெரிக்காவுக்கு மாற்றலாகிச் சென்றீர்கள்; இன்று டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரத்தில் எவ்வளவு பெரிய வீட்டை வாங்கிக் குடியிருக்கிறீர்கள்; வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்தச் செய்தியை எவ்வளவு ரகசியமாக பல ஆண்டுகள் ஒளித்துவைத்தீர்கள்; அவர்களுக்கு தெரிந்தால் உங்கள் பலகோடி வருமானம் போய்விடும் என்பதால் அதிகப் படிப்போ, உலக அறிவோ இல்லாத பல இலட்ச பாமர விசுவாசிகளை எப்படி இங்கிருப்பது போலவே ஏமாற்றி வந்தீர்கள் என்பவை போன்ற பல தகவல்களை மேல் மட்ட கிறிஸ்தவர் அறிவர்.
இந்த சூழலில் நீங்கள் "எப்படி ஒரு வீடு கூட இல்லாமல் ஓட்டலில் தங்கியிருந்தோம்" என்று நடிகையர் திலகம் அவர்கள் திறமையை மிஞ்சும் விதமாகக் குரலை தாழ்த்தி, உதடுகள் துடிக்க, வரும் கண்ணீரை அடக்க முயல்வது போலெல்லாம் ஒரு சாகஸம் செய்திருக்கிறீர்கள்! ஒரு வீடு இல்லாமல் இத்தனை குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு போய் கனடா நாட்டில் ஒரு நட்சத்திர விடுதியில் நாட்கணக்கில் தங்கக்கூடியவருக்கு எவ்வளவு பண வலிமை இருக்கும் என்று கொஞ்சம் அறிவு உள்ளவன் கூட யோசிப்பான் என்று உங்களுக்கு தோணலையா இவ்வளவு அப்பட்டமாக பொய் பேசினால் அசிங்கமாகி விடுமே என்றுகூட உங்களால் சிந்திக்க முடியலையா?
எதற்காக இந்தப் பொய் நாடகம்? வீடு வாங்கிய கதையும், கார் வாங்கிய கதையும், இந்த அம்மா விடுற கதைகளையும் கேட்க கேட்கக் கொதிக்கிறது என்று பல கிறிஸ்தவ விசுவாசிகள் புலம்புகிறார்கள். தமிழ்க் கிறிஸ்தவ சமூகமே அவமானத்தில் குறுகி நிற்கிறது.
உங்கள் குடும்பத்தின் உண்மையான பின்னணியை அக்குவேறு ஆணிவேறாகப் பட்டியலிட காத்திருக்கின்றனர் பலர். அது கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் மட்டுப்படுத்திவிடும் என்கிற ஒரே காரணத்துக்காக அமைதி காக்கின்றனர். கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்க முயல்கிற பல கோமாளிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்க உங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கிறது.
மூத்த தினகரன் ஐயா தொடங்கிய அந்த நல்ல பணியை, உங்களுக்கென்று கொடுக்கப்பட்டிருக்கிற ஊழியத்தை கொஞ்சமேனும் உண்மையுடனும், மனச்சான்றுடனும் செய்ய முற்படுங்கள். பலர் இன்னமும் உங்களை நம்புகிறார்கள். அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா, உங்களை நினைத்து வேதனைப்படுவதா என்று புரியவில்லை!’ என கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments