பிராமணரை குற்றம் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? ஜேம்ஸ் வசந்தனின் காரசார பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் போஸ்கி சமீபத்தில் பிராமணர் சமூகம் குறித்து உயர்வாக பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலான. இந்த வீடியோவுக்கு பலர் கடும் விமர்சனம் செய்தனர். சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ’மூடர் கூடம்’ இயக்குனர் நவீன் கூட தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ’பிராமண சமுதாயத்தை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற கேள்வி கேட்டு தனது பேஸ்புக் தளத்தில் நீண்ட பதிவை செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் சமீபத்தில் எழுதிய 'பிராமணர்' பற்றிய என் கருத்துகளுக்கு என்ன மாதிரியான எதிர்கருத்துகள் வரும் என்று தெரிந்துதான் எழுதினேன். அவை என் வாழ்க்கை அனுபவத்தில் என் உணர்வில் பதிந்தப் புரிதல்கள். அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை, வாய்ப்புமில்லை.
பொதுத்தளத்தில் இவ்வளவு அகன்ற, ஆழமான விஷயத்தை எல்லாரும் புரிந்துகொள்ளும், ஏற்கும் விதத்தில் ஒரே பகிர்வில் எழுதிவிட முடியாது. நான் பகிர்ந்தது ஒரு பரிமாணம். அது நேர்மறையானது. அதனால் எதிர்மறைப் பக்கங்களே இல்லையென நான் சொல்வதாக பலர் கற்பனை செய்துகொண்டதற்கு நான் பொறுப்பாக முடியாது.
வர்ணாசிரம அடிப்படையில் நம் மக்களை தரம்பிரித்து, அவர்களுக்கு எல்லா சமூக உரிமைகளையூம் மறுத்த உண்மைகளை ஏதோ நான் மறந்துவிட்டது போலப் பேசிக்கொண்டிருக்கிறீர் சிலர். அது பல நூற்றாண்டுக் கோபம் என்பதையும் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
முன்னோர் செய்த பிழைகளுக்கு இன்று நம்மோடு உறவாடுகிறவனை எப்படி பகைக்க முடியும்? இனமாகப் பகைக்க வேண்டாம்; தனிமனிதனாக அவனை எடைபோடுங்கள் என்பதுதான் என் அறிவுரை. அவன் தவறானவனென்றால் கழுவேற்றுவோம், நல்லவனென்றால் நட்புடன் இருப்போம்!
பழமை வாதம் பேசிக்கொண்டிருக்காமல், மறுக்கப்பட்ட என் மக்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவும், கல்வியின் அவசியத்தையும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், எதிர்கால இலக்குகளை நிர்ணயிக்கிற திறனையும், ஒருவன் முன்னேறுவதன் மூலம் அவன் சார்ந்த சமூகத்தையே முன்னேற்ற முடியும் என்பதையும் என்னளவில் நான் அவர்களுக்குக் கற்பித்துக் கொண்டு வருகிறேன். என்னோடு பயணிக்கிறவர் பலர்.
அது ஒருபுறம் இருக்கட்டும்! ரொம்ப நல்லவர் போல பலர் இங்கு பேசிக்கொண்டிருக்கின்றனர். எத்தனை பேர் உங்கள் வீடுகளில் இன்று சமூகத்தின் கடை நிலையில் வைக்கப்பட்டிருக்கிற மக்களை உங்கள் வீட்டில் உங்களோடு உங்கள் உணவு மேசையில் அமர்ந்து உணவருந்த வைப்பீர்கள் - மனதுக்குள் எந்தக் கிலேசமும் இல்லாமல்?
வீட்டுப் பணி செய்யும் பணிப்பெண்களுக்கென்று தனித்தட்டு, குவளை வைக்கிறவர்தானே உங்களில் பலர்? தமிழ்நாட்டில் பல ஊர்களில், கடைகளில் இன்னும் இருவேறு தேநீர்க் குவளைகளைப் பயன்படுத்துகிறார்களே, கோயிலுக்குள் ஒரு சாராரை அனுமதிக்க மாட்டேன் என்கிறார்களே, ஊருக்குள் வரக்கூடாது என்கிறார்களே.. இப்படி ஆணையிடுகிறவரெல்லாம் என்ன பிராமணரா? இங்கு கருத்துப் பதிவிடும் பலர் சாதிவெறிக்குள் உழல்பவர்தானே? நீங்கள் எப்படி மற்றவரை விமர்சிக்க முடியும்?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout