ஜல்லிக்கட்டு வன்முறையில் கைதான மாணவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,January 31 2017]

சமீபத்தில் சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுக்கான புரட்சி போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த போராட்டத்தின் இறுதி நாளில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக சென்னையில் 21 மாணவர்களும், தமிழகத்தின் இதர பகுதியில் 15 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 36 மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன. நடிகர் ராகவா லாரன்ஸ் முதல்வரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார் என்பதை நேற்று பார்த்தோம்
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஓபிஎஸ், ஜல்லிக்கட்டு வன்முறையில் கைதான 36 மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதியில் நிரந்தர மீன்சந்தை தமிழக அரசின் சார்பில் அமைத்து தரப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.