ஜல்லிக்கட்டில் நாட்டுமாடுகள் மட்டுமே....! அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு....!

  • IndiaGlitz, [Friday,September 03 2021]

இனி வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டுமாடுகளுக்கு மட்டும், அனுமதி தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வருடாவருடம் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், கலப்பின மாடுகள் மற்றும் வெளிநாட்டு மாடுகளை அனுமதிக்காமல் தடை விதிக்க வேண்டும் என்று, சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் முன்னிலையில் இன்று விசாரணை செய்யப்பட்டது.

இதுகுறித்து நீதிபதிகள் கூறியிருப்பதாவது,ஜல்லிக்கட்டு போட்டிகளில் இனி வரும் காலங்களில் கலப்பின மாடுகள் பங்கேற்க கூடாது. மேலும் போட்டிகளில் அனுமதிக்க கூடிய மாடுகள், நாட்டு மாடுகள் தான் என்று கால்நடை மருத்துவர்களின் சான்று பெற வேண்டும். தமிழக அரசு 'நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், கலப்பின வகையில் பிறக்கும் செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்கவும்' பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டுள்ளனர்.