ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் வாபஸ்… தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

“மறப்போம் மன்னிப்போம்” பாணியில் தமிழக அரசை எதிர்த்து போராட்டம் செய்த பள்ளி ஆசிரியர்களின் அனைத்து வழக்குகளையும் தமிழக முதல்வர் தள்ளுபடி செய்து அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் பல லட்சக்கணக்கான ஆசிரியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பணி நிரந்தரம் பெறுவர். அந்த வகையில் தற்போது ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ஆதரவு தெரிவித்து பேராட்டத்தில் குதித்த பல நூற்றுக் கணக்கானோரின் வழக்குகளை வாபஸ் பெற இருப்பதாகவும் தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் பெரும் போராட்டம் வெடித்தது. ஜனவரி 16 ஆம் தேதி வெறும் 50 பேருடன் தொடங்கிய இப்போராட்டம் லட்சக்கணக்கான மக்கள் குவிந்த நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி வரை தொடர்ந்தது. இதனால் அவசரச் சட்டம் இயற்றி தமிழக அரசு ஜல்லிக்கட்டு விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கியது.

இந்தப் போராட்டத்திற்கு இடையே சில நேரங்களில் சிறுசிறு அசம்பாவிதங்களும் நிகழ்ந்தன. குறிப்பாக போராட்டத்தை கலைக்குமாறு காவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தியபோது, அவர்களை எதிர்த்து வன்முறை செய்தது, சில வாகனங்களுக்கு தீ வைத்தது, காவல் நிலையத்திற்கு தீ வைத்தது உள்ளிட்ட பிரச்சனை வெடித்தது. இதனால் போராட்டக்காரர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் இப்போராட்டத்தில் 60 க்கும் மேற்பட்டோர் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அந்த வகையில் ஒரு சில வழக்குகளை தவிர மற்ற அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றுக் கொள்வதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.