அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா? மதுரையில் முதல்வர் ஆலோசனை

  • IndiaGlitz, [Sunday,January 22 2017]

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றப்பட்டு இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தமிழக சார்பில் கூறப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களே தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. இதற்காக முதல்வர் தற்போது மதுரை சென்றுள்ளார்.

ஆனாலும் சென்னை மெரீனா, அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் போராடி வரும் போராட்டக்காரர்கள் ஜல்லிக்கட்டு நடத்த மறுப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டகாரர்கள் தங்களுக்கு ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் தேவையில்லை என்றும், நிரந்தர தீர்வு மட்டுமே வேண்டும் என போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அலங்காநல்லூர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் வகையில் காவல் துறையினர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. அதுமட்டுமின்றி அலங்காநல்லூர் வரும் அனைத்து வழியையும் போராட்டக்காரர்கள் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தி அடைத்து வைத்துள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும் இதுகுறித்து மதுரையில் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.