ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நேரலை பார்க்க உதவும் செயலி
- IndiaGlitz, [Saturday,January 12 2019]
தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டியை நீதிமன்றம் தடை செய்திருந்த நிலையில் இளைஞர்களின் எழுச்சியால் அந்த தடை உடைக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின்போது நடைபெற்று வருகிறது.
குறிப்பாக மதுரையில் நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டை பார்க்க இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் வருவதுண்டு.
இந்த நிலையில் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 'மதுரை காவலன்' என்ற செயலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்று உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கிலும் நேரடியாக ஜல்லிக்கட்டை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இருந்த இடத்தில் இருந்தே ஜல்லிக்கட்டை பார்த்து ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.