ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் தேர்வு!!!

  • IndiaGlitz, [Thursday,November 26 2020]

 

உலகின் மிகப்பெரிய சினிமா விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாகப் போட்டியிடப் போகும் திரைப்படத்தைக் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் ஜல்லிக்கட்டு என்ற மலையாளத் திரைப்படம் போட்டியிடப் போகிறது.

இந்தப் படத்தை லிஜோ பெல்லிச்சேரி என்பவர் இயக்கி இருக்கிறார். இதில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சர்வதேச அளவில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி இருப்பது மலையாளத் திரை உலகினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிதும் பாராட்டை பெற்றதாகக் கூறப்படுகிறது. தற்போது சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கடந்த வருடம் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் வெளியான கல்லி பாய் என்ற இந்திப் படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இறுதிப் பட்டியலில் இந்தப் படம் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.