Jailer Review
ஜெயிலர் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஒன் மென் ஷோ
அசிஸ்டன்ட் கமிஷனர் அர்ஜுன் (வசந்த் ரவி) திருமனாகி மனைவி சிறு வயது மகன் (ரித்விக்) மற்றும் பெற்றோர்கள் முத்துவேல்பாண்டியன் (ரஜினிகாந்த்) தாய் (ரம்யா கிருஷ்ணன்) ஆகியோருடன் அரக்கோணத்தில் வசிக்கிறார். அங்கே சிலை கடத்தலில் ஈடுபடும் நபர்களின் முக்கிய தலைவன் வர்மாவை (விநாயகன்) பிடிக்க முனைப்புடன் செயல்படுகிறார் திடீரென காணாமல் போகிறார். போலீசிடம் இருந்து முத்துவேல்பாண்டியனுக்கு மகன் இறந்து விட்டதாக செய்தி வர அதை தாங்கி கொள்ள முடியாமல் மனமுடைந்து போகிறார். முன்னாள் போலீஸ்கரரான அவர் சிலை கடத்தல்காரர்களை பழி வாங்க முடிவு செய்து மூண்று முக்கிய புள்ளிகளை சத்தமில்லாமல் கொலை செய்கிறார். வர்மா தன் ஆட்களை கொன்றது ஒரு கிழவன் என்று உணர்ந்து ஆத்திரமடைந்து ஒரு சபதம் செய்கிறான். அதாவது அவர் பேரன், மருமகள் மற்றும் மனைவியை ஒவொருவராக கொன்று பின் கடைசியாக அவரையும் தீர்த்து காட்டுவதாக சவால் விடுகிறான். ஒரு சற்றும் எதிர்பாராத திருப்பதால் முத்துவேல் பாண்டியன் வர்மாவுக்காக ஒரு அபூர்வ பொக்கிஷத்தை அரசாங்கத்திடமிருந்து கொள்ளையடித்து தரவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதற்கு பின்னர் என்ன ஆனாது, முன்னாள் ஜெய்லரான அவர் வில்லன்களிடமிருந்து குடும்பத்தை காப்பாற்றினாரா மகன் கொலையை பழி தீரரா என்பதே ஜெயிலர் படத்தின் மீதி கதை.
ரஜினிகாந்த் இந்த படத்தில் தன் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தே வைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். முற்பகுதியில் ஒரு ஓய்வு பெற்ற மனிதராக மனைவியின் அவமதிப்பை சகித்துக்கொள்வதாகட்டும், வீட்டு வேலைகளைக் செய்வது, மகன் மட்டற்றும் பேரனுக்கு ஷூ பாலீஷ் போடுவது, பேரனுடன் யூ டியூப் ஷூட்டிங் செய்வது என்று ஒரு சாதாரண ஓய்வுபெற்ற மனிதரை அப்படியே கண் முன் நிறுத்துகிறார். டைகர் முத்துவேல் பாண்டியனாக மாறியபிறகு ரஜினியின் ஸ்டைலாகட்டும், தெனாவெட்டாகட்டும் கோபமாகட்டும் ஒரு ருத்ரதாண்டவமே திரையில் ஆடியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. குறிப்பாக தன்னை துச்சமாக நினைத்த வில்லன், காமெடியன் மற்றும் குடும்பத்தார் என அனைவருக்கும் அவர் யார் என்று புரிய வைக்கும் இடங்களில் தியேட்டர் அதிர்கிறது. ஒரு நீண்ட கால சூப்பர் ஸ்டாராக இருந்தும் ஷூ பாலிஷ் போடுவது, மற்றவர்கள் கலாய்ப்பதை ஏற்றுக்கொள்வது என்று தன்னுடைய கதாபாத்திரத்துக்காக இந்த வயதிலும் அவர் எடுத்திருக்கும் சிரத்தைக்கு ஒரு தனி அப்லாஸ். சைக்கோத்தனமான வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கும் விநாயகன்தான் ரஜினியை அடுத்த்து மனதில் நிற்கிறார். அவரும் ரஜினியும் சந்தித்து கொள்ளும் ஒவ்வொரு இடமும் தீப்பொறி கிளம்புகிறது திரையில். சரியாக எழுதப்படாத ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வசந்த் ரவி அவரால் முடிந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். யோகி பாபு காமடி வெகு சில இடங்களில் மட்டும் ஓகே.. உப்பு சப்பில்லாத வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் வந்து போகிறார். தமன்னா, சுனில் மற்றும் சுனில் ரெட்டி காமடி படு போர்...கோலமாவு கோகிலா அன்புதாசன் மற்றும் ரெடின் லேசாக கிச்சு கிச்சு மூடுகிறார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷராஃப் கேமியோக்கள் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
பழகிப்போன கதையோட்டம்தான் என்றாலும் ரஜினியின் வலுவான பாத்திரப்படைப்பும் ஏற்றுக்கொள்ளும்படியான கிளைமாக்ஸும் படத்திற்கு பெரிய பலம். தியேட்டர் ரசிகர்கள் கொண்டாடும் சில மாஸ் தருணங்கள் ஆங்காங்கே இருப்பதும் உண்மை. அந்த இன்டெர்வல் மொமெண்ட் புல்லரிக்க வைக்கிறது.
மைனஸ் என்று பார்த்தால் ரஜினி ரசிகர்களுக்கோ அல்லது பொது ரசிகர்களுக்கோ புதிதாக எதுவுமே இல்லை. படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திலேயே முத்துவேல்பாண்டியன் எவ்வளவு பெரிய ஆள் என்பது தெரிந்துவிடுவதால் வில்லன் மூலம் என்ன தொந்தரவு வந்தாலும் நமக்கு எந்த பதட்டமும் ஏற்படவில்லை. தந்தை மகன் பாசத்தை அவர்கள் குடும்ப பிணைப்பை ஒரு சில நொடிகள் திரையில் காட்டினாலே போதும் என்று தப்பு கணக்கு போட்டிருக்கிறார்கள். மகன் மரணத்தை கேஷுவலாக அனைவரும் கடந்துவிடுவதால் நமக்கும் எந்த ஒரு இணைப்பும் கதைமேல் ஏற்படாமல் போகிறது. அந்த முக்கியமான ட்விஸ்டும் பெரிதாக எடுபடவில்லை. திரைக்கதை பின் பாதியில் தடம் புரண்டுவிடுகிறது பிறகு கிளைமாக்சில்தான் சூடு பிடிக்கிறது.
ஜெயிலர் திரைக்கதை துவண்டு விழும்போதெல்லாம் பெய்லராக வந்து காப்பாற்றுவது அனிருத்தின் பின்னணி இசைதான். பாடல்கள் ஏற்கனவே தாறு மாறு ஹிட் என்பதால் சொல்லவேண்டியதே இல்லை திரையில் எப்படி இருக்கிறதென்பது. விஜய் கார்த்திக் கண்ணன் காமிரா நிர்மல் எடிட்டிங், கிரண் ஆர்ட் டைரக்ஷன் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு என்று அனைத்தும் தரம். கோலமாவு கோகிலா, டாகடர் படத்தின் இயக்குனர் நெல்சனை நம்பி செல்பவர்களுக்கு ஏமாற்றம் நிச்சயம். அதே சமயம் ரஜினியை வைத்து அவர் வயதுக்கேற்ப ஒரு புதுவித மாசை காட்டியதற்காக அவரை பாராட்டவும் செய்யலாம்.
மொத்தத்தில் ஜெயிலர் ரஜினியை மட்டுமே நம்பியிருக்கிறது அவர் ரசிகர்கள் தாராளமாக கண்டு களிக்கலாம்
- Read in English