நான் ஒரு சென்னை பொறுக்கி. விஜய் வில்லன் பேட்டி
- IndiaGlitz, [Saturday,May 07 2016]
கோலிவுட்டின் புதிய வில்லனாக உருவெடுத்து வருபவர் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'லிங்கா' படத்தின் மூலம் கோலிவுட்டில் வில்லன் நடிகராக பிரபலமான ஜெகபதிபாபு தற்போது விஜய் நடிக்கும் 'விஜய் 60' படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி விஷாலின் 'கத்திச்சண்டை' படத்திலும் இவர்தான் வில்லன்.
விஜய் மற்றும் விஷால் படங்களின் கேரக்டர் குறித்தும் தனக்கும் சென்னைக்கும் உள்ள நெருக்கம் குறித்தும் ஜெகபதிபாபு சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கல்லூரி காலங்களில் தான் ரவுடியாக இருந்ததாகவும் தன்னை நண்பர்கள் 'சென்னை பொறுக்கி' என்றே அழைப்பார்கள் என்றும் ஜெகபதிபாபு கூறியுள்ளார்.
விஜய்யை தான் இரண்டு முறை சந்தித்துள்ளதாகவும், விஜய் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்றும் 'விஜய் 60' படத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வில்லன் கேரக்டர் மிகவும் வித்தியாசமானது என்றும் அவர் கூறியுள்ளார். விஜய் தந்தை எஸ்.ஏ.சி யும் தனது தந்தையும் பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள் என்பதால் இரண்டு குடும்பமும் மிகவும் நெருக்கமான குடும்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் விஷாலின் 'கத்திச்சண்டை' படத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வில்லன் வேடம் ரெகுலரான வில்லன் கேரக்டர் இல்லை என்றும் இந்த கேரக்டர் குறித்து இதற்கு மேல் கூற முடியாது என்றும் கூறிய ஜெகபதிபாபு, மோகன்லால் நடித்து வரும் 'புலிமுருகன்' என்ற மலையாள படத்திலும், இரண்டு கன்னட படங்களிலும் நடித்து வருவதாக கூறினார்.