தோனிதான் அணியை வழிநடத்துகிறாரா? தக்கப்பதிலடி கொடுத்த சிஎஸ்கே கேப்டன்!
- IndiaGlitz, [Wednesday,April 06 2022] Sports News
ஐபிஎல் தொடரின் 15 ஆவது சீசன் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி அபாரமாகச் செயல்படும் என்று எண்ணிய ரசிகர்களுக்கு அந்த அணி பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்து, தான் விளையாடிய 3 போட்டிகளிலும் படு சொதப்பலாக தோல்வியைத் தழுவியிருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி மீது பல மூத்த வீரர்களும் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக அஜய் ஜடேஜா, பாத்தீவ் படேல் போன்றோர் அணியை தோனியே வழிநடத்துகிறார். அணியின் செயல்திறனை கூட்டுவதற்காக தோனி செய்யும் காரியங்களால் கேப்டன் ரவீந்திர ஜடேஜா இந்த இடத்தில் செயல்படாமல் இருந்து வருகிறார் எனச் சாடியுள்ளனர்.
இத்தகைய விமர்சனங்களைத் தொடர்ந்து சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா, நான் இப்போது முக்கியமான இடத்தில் இருந்து பீல்டிங் செய்து வருகிறேன். நான் நிற்கிற இடத்திலிருந்து பந்துவீச்சாளர்களை தொடர்பு கொண்டு பேசுவது கடினம். இதனால் மாஹி பாய் சில ஆலோசனை குறிப்புகளை வழங்குகிறார். அவர் பல வருட அனுபவம் கொண்டவர். இந்த ஜாம்பவானை பெறுவதற்கு நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும். அவருடைய ஆலோசனைகளை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி கடந்த 2008இல் துவங்கப்பட்டதில் இருந்து மகேந்திர சிங் தோனியே அணியை வழிநடத்தி வருகிறார். மேலும் 4 வெற்றிக்கோப்பைகளைப் பெற்றுத்தந்த அவர் இந்த ஆண்டு தொடரின்போது தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். மேலும் அணியை வலுப்படுத்தும் வேலைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். ஆனால் சிஎஸ்கே இந்தத் தொடரின்போது பேட்டிங்கைவிட ஃபீல்டிங்கில் படு சொதப்பலாக விளையாடி வருகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.