ஜடேஜா பதவி விலகலுக்கு இதுதான் காரணமா? வைரலாகும் அதிர்ச்சி பின்னணி!
- IndiaGlitz, [Sunday,May 01 2022] Sports News
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாத நிலையில் தற்போது 15 ஆவது சீசன் தொடருக்கான லீக் போட்டிகள் கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான சிஎஸ்கேவிற்கு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் திடீரென்று தனது பதவியில் இருந்து விலகி இருப்பதற்கு பல்வேறு அதிர்ச்சி காரணங்கள் கூறப்படுகின்றன.
சிஎஸ்கே அணி துவங்கப்பட்டதில் இருந்தே அந்த அணியின் கேப்டனாக தல தோனி இருந்து வந்தார். இந்நிலையில் 15 ஆவது சீசன் போட்டி துவங்குவதற்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து ஜடேஜாவை கேப்டனாகக் கொண்ட சிஎஸ்கே இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் இனிவரும் 6 போட்டிகளிலும் வெற்றிப்பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப்பெற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் ஜடேஜா திடீரென்று தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு ஜடேஜாவிற்கு ஏற்பட்டு இருக்கும் அழுத்தமே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அதாவது போட்டியின் இக்கட்டான சூழ்நிலைகளில் தோனியே அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங்கை முடிவுசெய்கிறார். இதனால் ஜடேஜா சுதந்திரத் தன்மையுடன் செயல்பட முடிவதில்லை என்று பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
மேலும் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் ஃபீல்டராக இருந்துவந்த ஜடேஜா கேப்டன் பதவிக்குப் பிறகு ஃபார்ம் அவுட்டாகிவிட்டார். ஃபீல்டிங்கிலும் கடுமையாகத் சொதப்புகிறார். இதையடுத்து கேப்டன் பதவியை விட்டு விலகுமாறு ரசிகர்களும் விமர்சிக்கத் துவங்கிவிட்டனர். இதைத் தவிர்க்கத்தான் ஜடேஜா கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தனது விளையாட்டில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி மீண்டும் பதவியேற்றுள்ளார். இதனால் தோனி ஓய்விற்குப் பின் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.