என்னவொரு கனிவு? நடிகை ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ்-ஐ கொண்டாடும் ரசிகர்கள்!
- IndiaGlitz, [Tuesday,May 09 2023]
பாலிவுட் சினிமாவில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவரும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறார். ஆனாலும் அதே உற்சாகத்துடன் சினிமா மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்திவரும் அவரை ரசிகர்கள் தற்போது பாராட்டி வருகின்றனர்.
பிரபல இசையமைப்பாளர் அன்ஷீல் கார்க்கின் பிறந்தநாள் விழா நேற்று மும்பையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு சோனு சூட், திஷா பதானி, இஷா குப்தா, மௌனி ராய் போன்ற பிரபலங்கள் வருகை தந்தனர். அதேபோல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ்ஸும் இந்த விழாவிற்கு வந்திருந்தார். அவர் காரை விட்டு இறங்கிய உடனேயே வயதான மூதாட்டி ஒருவர் நடிகை ஜாக்குலினை வழிமறித்தார். ஆனால் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத ஜாக்குலின் மூதாட்டின் கையைப் பிடித்து உரையாடினார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கருத்து பதிவிட்ட ரசிகர்கள் சிலர் ஜாக்குலினுக்கு என்னவொரு கனிவு? ரசிகர்களை எப்படி அணுக வேண்டும் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. இதே மூதாட்டிதான் மற்றொரு பாலிவுட் நடிகையை வழிமறித்து பேசினார். ஆனால் அப்போது நடந்ததோ வேறு. அந்த மூதாட்டியிடம் முரட்டுத்தனமாக அந்த நடிகை நடந்துகொண்டார். ஆனால் ஜாக்குலின் கனிவோடு பேசுகிறார். அவரை பிடித்திருக்கிறது என்று கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
பெங்களூர் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமான நட்பில் இருந்ததாகவும் ரூ.100 கோடி மோசடி வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய உணர்வுடன் விளையாடி சுகேஷ் ஏமாற்றிவிட்டதாகக் கூறிய ஜாக்குலின் தற்போது ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.
இதற்கு முன்பு கோடை காலத்தில் விலங்குகளுக்கு தண்ணீர் வையுங்கள் என்று இன்ஸ்டாவில் கோரிக்கை விடுத்த நடிகை ஜாக்குலின் தற்போது மூதாட்டி ஒருவரிடம் மிகவும் கனிவுடன் நடந்து கொண்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு மற்ற நடிகைகள் இவரைப் பார்த்து கற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.