அட இதாங்க மனசு… விலங்கு பாதுகாப்பு குறித்து இன்ஸ்டாவில் பாடம் எடுத்த பாலிவுட் நடிகை!

  • IndiaGlitz, [Monday,May 08 2023]

கோடை காலத்தில் பறவை, நாய், பூனை போன்ற விலங்கினங்கள் தண்ணீருக்காக படும்பாடு சொல்லிமாளாது. அதுவும் நகரப் பகுதிகளில் இந்தப் பிரச்சனை அதிகமாகக் காணப்படுகிறது. இதுகுறித்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் இன்ஸ்டாவில் கூறியுள்ள கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன.

இலங்கையை பூர்வீமாகக் கொண்ட நடிகை ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் 2006 இல் மிஸ் ஸ்ரீலங்கா யுனிவர்ஸ் பட்டத்தை வென்று பிரபலமானார். தொடர்ந்து நடிப்புக்காக இந்திய சினிமாவை நாடிய அவர் அதே ஆண்டில் வெளியான அலாடின் திரைப்படத்தில் நடித்து முதல் படத்திலேயே பிரம்மாண்ட அறிமுகத்தைப் பெற்றார். தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் ‘மார்டர்’, ‘ஹவுஸ்ஃபுல்’, ‘ரேஸ்’ போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்த இவர் தற்போது ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பல்வேறு மோசடிகளில் சிக்கி தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமான நட்பில் இருந்ததாகக் கூறப்பட்டது. ஏற்கனவே 12 மோசடி வழக்குகளில் சிக்கி கைதுசெய்யப்பட்டிருந்த சுகேஷ் சிறையில் இருந்தபோது கடந்த 2019 இல் மேலும் 200 கோடி மோசடியில் ஈபட்டதாகவும் பெற்ற பணத்தில் இருந்து 10 கோடி அளவிற்கான பரிசுபொருட்களை நடிகை ஜாக்குலினுக்கு வாங்கிக்கொடுத்தாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கிற்கான விசாரணை வளையத்திற்குள் நடிகை ஜாக்குலினும் தற்போது சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய நடிகை ஜாக்குலின் சுகேஷ் என்னுடைய உணர்வுடன் விளையாடி ஏமாற்றிவிட்டார் என்றும் அவர் மோசடி பேர்வழி என்று எனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது பாலிவுட் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு வரும் நடிகை ஜாக்குலின் வெயில் காலங்களில் விலங்குகள் மற்றும் பறவைகள் நீருக்காக படும் கஷ்டத்தைத் தீர்க்க ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் மண் கலயங்களில் நீரை நிரப்பி வையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தக் கடினமான கோடை காலங்களில் விலங்குகளுக்கு கிண்ணங்களில் நீரை குளிர்ச்சியாக நிரப்பி வையுங்கள். மேலும் தினம்தோறும் புதிய நீரை கிண்ணங்களில் நிரப்புங்கள். நீரை தேங்க விடாதீர்கள். இத்தகைய முயற்சிக்காக நன்றி என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருவதோடு முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளனர்.