ஜெ.தீபா அதிரடி முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி
- IndiaGlitz, [Tuesday,July 30 2019]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது அண்ணன் மகளான தீபா அரசியலில் நுழைந்தார். முதலில் அவர் அதிமுகவில் இணையவிருப்பதாக கூறப்பட்டது. இதற்காக ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதன்பின்னர் திடீரென தீபா பேரவை என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். அவரை அடுத்து அவருடைய கணவரும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார். இருவரும் அரசியலை ஒரு விளையாட்டு போன்று எண்ணிக்கொண்டு, கட்சியின் நிர்வாகிகளை விலக்குவதும் பின்னர் மீண்டும் சேர்த்து கொள்வதுமாக இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது. தான் தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும், தன்னுடைய தீபா பேரவையை அதிமுகவுடன் இணைத்து கொண்டதாகவும், இனிமேல் தன்னை யாரும் அரசியல்ரீதியாக அணுக வேண்டாம் என்றும், மீறி தன்னிடம் தொடர்பு கொள்ள முயன்றால் காவல்துறையில் புகார் அளிக்க நேரிடும் என்றும் தனது முகநூலில் தீபா பதிவு செய்துள்ளார்.
மேலும் தான் கணவருடன் குடும்ப வாழ்க்கையில் முழு அளவில் ஈடுபட போவதாகவும், குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் தனக்குத்தான் ஆசை என்றும், தீபா பேரவை என்ற பெயரை சொல்லி இனிமேல் யாரும் தன்னை தொல்லை செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தீபாவின் இந்த அதிரடி முடிவால் அவரை நம்பியிருந்த கோடிக்கணக்கான தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவின் அரசியல் விலகலால் உண்மையிலேயே வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.