ஜெ.தீபாவின் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை
- IndiaGlitz, [Tuesday,January 09 2018]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இந்த பேரவையில் தீபாவின் கார் டிரைவர் ராஜாவுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டதால் தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் வாழ்க்கையில் பிரிந்தது மட்டுமின்றி மாதவன் தனிக்கட்சி ஒன்றையும் ஆரம்பித்தார்.
இந்த நிலையில் தற்போது தீபாவுக்கும் கார் டிரைவர் ராஜாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால் ராஜாவை பேரவையில் இருந்து தீபா நீக்கியுள்ளார். இதனையடுத்து தீபாவுடன் மீண்டும் இணைந்த மாதவன், அவருக்கு டிரைவாகவும் இருந்து வருகிறார்.
கார் டிரைவர் ராஜாவை நீக்கியது குறித்து தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவையின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும், விதிகளுக்கும் மாறாக, தொடர்ந்து களங்கத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால், பேரவையின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜா விடுவிக்கப்படுகிறார். எனவே அவருடன் உறுப்பினர்கள் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.
தீபாவின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவை தீபா பேரவையின் தொண்டர்கள் பாராட்டி வருகின்றனர்.