இது வைரமுத்து திருப்பி அடிக்கும் நேரமா?
- IndiaGlitz, [Wednesday,January 24 2018]
கடந்த சில நாட்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு சோதனையான நாட்கள் என்றே சொல்லலாம். இராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக அவர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. தனது கருத்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக அவர் கூறிய பின்னரும் அவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தையே ஒருசிலர் அநாகரீகமாக விமர்சனம் செய்தனர்,
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில் காஞ்சி சங்கராச்சாரியர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தபோது எழுந்து நிற்காமல், தேசிய கீதம் இசைக்கும் போது மட்டும் எழுந்து நின்றது பெரும் சர்ச்சையாக கருதப்படுகிறது. இதுகுறித்து சமூக இணையதளங்களில் சங்கராச்சாரியருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது:
'தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது. இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை' என்று கூறியுள்ளார்.
மேலும் தந்தை பெரியார் இயக்கம், 'தமிழ்த்தாயை அவமதித்த சங்கராச்சாரியர், மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது. ஆக, இதுவரை ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வைரமுத்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் அவர் திருப்பி அடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.