ஜெயில் வாழ்க்கையே பெட்டர்… கொரோனா பயத்தால் சிறை கைதிகள் கதறல்!
- IndiaGlitz, [Monday,May 31 2021]
கொரோனா பரவல் காரணமாக சிறையில் இருக்கும் கைதிகளின் பாதுகாப்பு கருதி அவர்களை இடைக்கால ஜாமீனில் விடுவிக்கும்படி உச்சநீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டு இருந்தது. இதனால் பல மாநிலங்களில் உள்ள சிறைகள் தங்களது கைதிகளை இடைக்கால ஜாமீன் மூலம் வீட்டிற்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சிறை கைதிகள் பலரும் தங்களது வீடுகளுக்கு செல்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் வெளியே செல்லும்போது கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தையும் சிலர் வெளிப்படுத்த தொடங்கி விட்டனர். அதிலும் வீடு இல்லாத சிறை கைதிகள் கொரோனா நேரத்தில் வெளியே சென்றால் தங்களின் நிலை என்னவாகும்? சாப்பாட்டிற்கு என்ன செய்வது? என்பது போன்ற பயத்தை வெளிப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களைக் காட்டி உத்திரப்பிரதேசத்தில் உள்ள 21 சிறை கைதிகள் தங்களது ஜாமீன் வேண்டாம், நாங்கள் ஜெயிலிலேயே இருந்து கொள்கிறோம் என சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனாவின் முதல் அலையின்போது தமிழக அரசு 7 வருடம் சிறை தண்டனை பெற்று இருக்கும் கைதிகள் வரை அவர்களுக்கு ஜாமீன் கொடுத்து வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்து செய்து இருந்தது. ஆனால் கொரோனா பரவல் சற்று தணிந்த நிலையில் இந்த முடிவு கைவிடப்பட்டது. தற்போது இரண்டாவது அலையை ஒட்டி தமிழகத்தில் உள்ள சிறைகளில் 792 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்களில் 682 பேர் முற்றிலும் குணமாகி உள்ளனர். மேலும் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு உயர்மட்டக்குழு வழிகாட்டலின்படி ஜாமீன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் 9 மத்தியச் சிறைகள் உட்பட மொத்தம் 138 சிறைகள் இயங்கி வருகின்றன. இதில் தற்போதுவரை 14,565 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கைதிகளில் யாரை வீட்டிற்கு அனுப்புவார்கள், யாருக்கு எல்லாம் இடைக்கால ஜாமீன் கிடைக்கும் என்ற விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில் கொரோன அச்சம் காரணமாகச் சில கைதிகள் நாங்கள் இங்கேயே இருந்து கொள்கிறோம் என கோரிக்கை வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கோரிக்கையைப் பார்த்து சில அதிகாரிகளே ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.